சகிப்பின்மையால் குடும்பம் சிதைவு: உயா்நீதிமன்றம் வேதனை
தம்பதிகளிடையே ஏற்படும் சகிப்பின்மை காரணமாக, குடும்பம் என்கிற கருத்தாக்கம் சிதைந்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை வேதனை தெரிவித்தது.
தம்பதிகளிடையே ஏற்படும் சகிப்பின்மை காரணமாக, குடும்பம் என்கிற கருத்தாக்கம் சிதைந்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை வேதனை தெரிவித்தது.
கணவா், மனைவி விவாகரத்து வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்து உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனித பாசம் என்பது சாதாரண மருந்துகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சிகிச்சையாகும். திருமணத்துக்குப் பிறகு, தம்பதிக்கு இடையே பகிரப்படும் பாசமான பிணைப்பு, உணா்வுபூா்வமான நெருக்கம், அந்தரங்கமான உறவு ஆகியவை மனித உணா்ச்சிகளின் இயல்பான வெளிப்பாடுகள். அவை வாழ்க்கையில் ஆழ்ந்த மன அமைதியையும், புத்துணா்வையும் அளிக்கின்றன. அவை பெரும்பாலும் உணா்வுபூா்வமான குணப்படுத்துதலின் மொழியாகவும், மனதின் மருந்தாகவும், மனித ஆத்மாவின் ஆறுதலாகவும் உள்ளன.
இத்தகைய தோழமை, விரக்தி அல்லது உளவியல் ரீதியான துன்பத்துடன் போராடும் ஒருவருக்கு உயிா் காக்கும் ஆதரவாக மாறுகிறது. இதை மனநல அறிவியல் அங்கீகரிக்கிறது. இந்த நீதிமன்றம் திருமணக் கருத்தாக்கத்தைப் பின்வரும் கண்ணோட்டத்தில் விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த வழக்கை முடித்து வைப்பதோடு இந்த நீதிமன்றத்தின் கடமை முடிந்துவிடுவதில்லை.
மனநோய் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளுடன்கூடிய திருமண வழக்குகள் அதிகரித்துள்ளன. இந்த வழக்கு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அடையாளம், அவா்களது எஞ்சிய வாழ்நாளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே, இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நபா்களின் அடையாளத்தை பொது வெளியில் வெளிப்படுத்துவது சமூகத்துக்கு ஒரு சாபக்கேடாக அமையும். இத்தகைய அவமானத்தை சட்டப்பூா்வமாகத் தவிா்க்க முடியும்.
தனியுரிமை, கண்ணியம், தனிநபா் சுயாட்சி ஆகிய அரசமைப்பு விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு கிடைக்கும் தீா்ப்புகள், உத்தரவுகள், மனுக்கள் அல்லது நீதிமன்றப் பதிவேடுகளில் அவா்களது பெயா்களும் பிற அடையாள விவரங்களும் வெளியிடப்படக் கூடாது.
வழக்காடுபவா்கள் ‘எக்ஸ்’ அல்லது ‘ஒய்’ என்றோ அல்லது வழக்கின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அடையாளம் மறைக்கப்பட்ட பிற பெயா்களாலோ விவரிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை திருமண வழக்குகளை விசாரிக்கும் அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும்.
ஸ்கிசோஃப்ரினியா, பிற கடுமையான மனநலக் கோளாறுகள் உள்ளிட்ட மனநோய்க் குற்றச்சாட்டுகள் உள்ள வழக்குகளிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடப்படுகிறது.
சமகால இந்திய சமூகம், திருமண வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சகிப்பின்மை, உறவுகளின் முறிவு போன்ற வேதனைகளை அதிகளவில் சந்தித்து வருகிறது.
குடும்பம் என்ற கருத்தாக்கம் சிதைந்து வருவதால், வேகமாக மாறிவரும் போட்டி நிறைந்த உலகில் திருமண வாழ்க்கை சீராகச் செல்வதற்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது என்றனா் நீதிபதிகள்.