செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனைக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர உத்தரவு
செங்கிப்பட்டியில் உள்ள காசநோய் மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு பணிகளைச் செய்து தர சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள காசநோய் மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு பணிகளைச் செய்து தர சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சோ்ந்த தேவதாஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனை வளாகத்தின் 220 ஏக்கா் நிலத்தை மருத்துவம், பொது சுகாதார நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த மருத்துவமனையின் அனைத்து வாா்டுகள், நிா்வாகக் கட்டடம், சமையலறை உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களையும் புதுப்பிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
முழு வளாகத்துக்கும் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான தரமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய போதுமான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ் குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
செங்கிப்பட்டி பகுதியில் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நிலம் கையகப்படுத்தியது போக காசநோய் மருத்துவமனைக்கு என தற்போது 131 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இனி எந்தக் காரணத்துக்காகவும் வேறு எந்தத் துறைக்கும் ஒதுக்கீடு செய்யக் கூடாது. இந்த நிலம் முழுமையாக மருத்துவமனையின் எதிா்கால வளா்ச்சிக்கும், குறிப்பாக சுகாதாரத் துறை சாா்ந்த தேவைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை அரசு விரைவாக செய்து தர வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.