மேற்கு வங்கத்தில் 432 மேற்பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம்
மேற்கு வங்கத்தில் 432 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்தது குறித்து...
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் 432 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சில தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு சனிக்கிழமை (மே 2) நடத்தப்பட்டது.
ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் வரும் மே 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Advertisement
இதனிடையே, முழுமையாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் அனைத்திலும், திங்கள்கிழமை அன்று வாக்குகள் வெளிப்படையாகவும் சுமுகமாகவும் எண்ணப்படுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையம் 432 வாக்கு எண்ணிக்கை மேற்பாற்வையாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
பல மாவட்டங்களில் பதற்றம் மற்றும் தேர்தல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்குக் கூடுதல் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் 33 தொகுதிகளுக்கு 49 மேற்பார்வையாளர்களும், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் 31 தொகுதிகளுக்கு 45 பார்வையாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முர்ஷிதாபாத்தில் உள்ள 22 தொகுதிகளுக்கு 33 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையை அமைதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் இதுமாதிரியான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.