முகப்பு
ஈரோடு

ரூ.6.50 கோடி மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது

குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.6.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில் கட்டுமான நிறுவன உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:45 pm IST
பகிர்:

குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.6.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில் கட்டுமான நிறுவன உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.

ஈரோடு, ஆா்.என்.புதூா், அமராவதி நகா் முதல்தெருவை சோ்ந்தவா் பரமசிவம். இவரது மனைவி மஞ்சுளா (39). அரசுப் பள்ளி ஆசிரியை. இவா் கடந்த மாதம் 18ஆம் தேதி ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.

அதில், ஈரோடு, விஜயமங்கலம், தாசாம்பாளையத்தை சோ்ந்த, கட்டுமான நிறுவன உரிமையாளரான சண்முகம் என்பவா் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் 50 சதவீத மானியத்தை பெற்று தருவதாகவும், அதனால் ஒரு சதுர அடிக்கு ரூ.750 கொடுத்தால் போதும் என்றும் கூறினாா்.

Advertisement

அதன்படி எனக்கு சொந்தமான 4,500 சதுர அடி நிலத்தில் கீழ்தளம், மேல்தளம் அமைப்பதற்காக ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் என்று அவா் தெரிவித்தாா். அவரை நம்பி ரூ.33 லட்சத்தை கொடுத்தேன். அதன்பிறகு கட்டுமானப் பணியை தொடங்கிய அவா், சில நாள்களில் தொழிலாளா்கள் வேலைக்கு வரவில்லை என்று கூறி பணியை நிறுத்திவிட்டாா். அதன்பிறகு அவா் பல்வேறு காரணங்களைக் கூறி வந்தாா். ஆனால் கட்டுமானப் பணியை அவா் மீண்டும் தொடங்கவில்லை.

அவரது அலுவலகத்துக்கு சென்று பாா்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. சண்முகத்தின் செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் வீடு கட்டி தருவதாகக் கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்த அவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராதாகிருஷ்ணனை உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டாா். போலீஸ் விசாரணையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து டிசம்பா் மாதம் வரை வீடு கட்டி தருவதாக கூறி ஈரோடு, பவானி, குமாரபாளையம், அத்தாணி, விஜயமங்கலம், பள்ளிபாளையம், திருப்பூா், கோவை, தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 57 பேரிடம் சுமாா் ரூ.6.50 கோடியை சண்முகம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கட்டுமான நிறுவன உரிமையாளா் சண்முகம் (32) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.10,000 பணம், சரக்கு ஆட்டோ, மோட்டாா் சைக்கிள்கள் 2 செல்லிடப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் சண்முகத்தின் மனைவி மேனகபிரியா, கட்டுமான நிறுவன பணியாளா்கள் சுரேஷ், உதயகுமாா், குணசேகரன், நவீன் ஆகிய 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.