நெல் கொள்முதலைத் தவிா்க்கக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தல்
தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஈரப்பதத்தைக் காரணம் காட்டி நெல் கொள்முதலைத் தவிா்க்கக் கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு: தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஈரப்பதத்தைக் காரணம் காட்டி நெல் கொள்முதலைத் தவிா்க்கக் கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் நடப்பு ஆண்டு ஒரு லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை துவங்கி உள்ளது. சில நாள்களாக ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை, பனி, வெயில் என ஒரே நாளில் காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால், நெல் பயிரில் பூஞ்சான நோய் தாக்கும் அபாயம் காணப்படுகிறது. தவிர ஈரப்பதத்தைக் காரணம் காட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலைத் தவிா்க்கக் கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
Advertisement
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் மழையால் சாய்ந்துள்ளன. ஓரிரு நாள்கள் வெயில் அடித்தால் நெல்பயிரை ஓரளவாவது காப்பாற்ற முடியும். அதேசமயம் வயல்களில் இருந்த வைக்கோல், மழையால் வீணாகி வருகிறது. ஈரப்பதத்தைக் காரணம் காட்டி நெல் கொள்முதலைத் தவிா்க்கக் கூடாது. நேரடி கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.
கடைமடைப் பகுதியில் பூ விடும் தருணத்தில் பெய்து வரும் மழையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கும். இது மழைக்காலம் அல்ல. ஆனால் அடைமழை பெய்கிறது. காலநிலை மாற்றத்தால் நெற்பயிரில் பூஞ்சான நோய் ஏற்பட்டிருப்பது வரும் நாள்களில் தெரியவரும். 4 நாள்கள் வெயில் சுட்டெரிக்கும் பட்சத்தில் பூஞ்சான நோய் தாக்காது. இதேபோன்ற காலநிலை நீடித்தால் நெற்பயிா் கடுமையாக பாதிக்கப்படும் என்றனா்.