விவாகரத்துக் கோரும் நடைமுறை, ஆவணங்கள் என்னென்ன?
விவாகரத்து கோரி பதிவு செய்யும் முறை, தேவையான ஆவணங்கள் போன்றவை..
மிக மகிழ்ச்சியோடு தொடங்கும் திருமண வாழ்வு எதிர்பார்த்தவகையில் பயணிக்காத போது, தம்பதிகள் தேர்வு செய்வது விவாகரத்தை.
திருமணம் தற்போது பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோல விவாகரத்து என்றால் வெறுமனே பிரிந்து வாழ்வது என்றில்லாமல் அதனை சட்டப்பூர்வமாக்குகிறது.
விவாகரத்து பரஸ்பர சம்மதத்தின் மூலமாக பெறுவது, திருமண முறிவு மற்றும் தலாக் போன்று பல்வேறு வகைகளில் நடக்கிறது. விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்க ஆண் - பெண் இருவருக்கும் உரிமை உள்ளது. திருமண உறவில் இருந்து விலக விரும்பும் ஒருவர் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
விவாகரத்து வழக்குகளின் வகைகள் போலவே, அதனுடன் தொடர்புடைய சில வழக்குகளும் உள்ளன. அதாவது, • திருமணத்தை ரத்து செய்தல், பரஸ்பர விவாகரத்து, திருமண முறிவு, குலா அல்லது தலாக் நிறைவேற்றப்பட்டால் உரிமை கோருவதற்கான வழக்கு, ஜீவனாம்சம் கோரும் வழக்கு, குடும்ப வன்முறை நிகழ்ந்திருந்தால் அது குறித்து வழக்கு, தம்பதிக்கு குழந்தை இருந்தால் அதன் பொறுப்பு குறித்த வழக்கு ஆகியவை இதில் அடங்கும்.
துன்புறுத்தல், திருமணத்தை மீறிய உறவு, கொடூர குணம், குடும்பத்தை கவனிக்காமல் விடுதல், விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தல், தலாக் அறிவித்தல் போன்றவற்றால் விவாகரத்துகள் நேரிடுகின்றன.
விவாகரத்து கோரும்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் - திருமண அழைப்பிதழ், திருமணச் சான்றிதழ் (இருப்பின்), திருமணப் பதிவுச் சான்றிதழ் (இருப்பின்), கணவன் - மனைவி புகைப்படம், இருவரது வயதுச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், குழந்தை இருந்தால் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், மதம் மாறி திருமணம் செய்திருந்தால், மதம் மாறியதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
விவாகரத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், எதிர் தரப்புக்கு பதிவு அஞ்சலில் நோட்டீஸ் அனுப்பப்படும்.
கணவன் - மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, மன ஒற்றுமையை ஏற்படுத்த இருவருக்கும் மூன்று முறை ஆலோசனை வழங்கப்படும்.
அது சரிவரவில்லை என்றால், இருவரும் சமரசமாக பிரிந்து செல்ல வழிவகை ஏற்படுத்தப்படும். மத்தியஸ்தர் பணி ஏற்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணை நடைபெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கும்.
விவகாரத்து வழக்கு என்பது, இரு தரப்பு வாதங்களும் முன் வைக்கப்படும். மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது வாதங்கள் முன் வைக்கப்படும். இரு தரப்பிலும் சொத்து, கடன் விவரங்கள் தாக்கல் செய்யப்படும். குறுக்கு விசாரணை, உத்தரவுகள் என நீளும். இருதரப்பும் சமரசமாக விவாகரத்து பெற்றால் 6 மாத கால காத்திருப்புக் காலம் வைக்கப்படும்.
பிறகு, நீதிமன்றம் விவாகரத்து வழங்குவது குறித்து பரிசீலிக்கும்.