18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை...
சென்னை, ஏப். 17- உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், தடுப்புக் காவல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் கே. பிரம்மானந்த ரெட்டி இன்று சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
"விடுதலை விவகாரம் என்பது ஒரு வழிப்பாதை அல்ல. விடுதலை ஆனவர்களோ, அல்லது மற்றவர்களோ அமைதிக்கும் பொது பந்தோபஸ்துக்கும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வார்களே யானால், அவர்கள் மறுபடி கைது செய்யப்படலாம்; புதுக் கைதுகளும் தொடரலாம்" என்று பிரும்மானந்த ரெட்டி எச்சரித்தார்.
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சனிக்கிழமையன்று கிண்டி கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். தேசத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் ஏற்கனவே கணிசமான அளவுக்குத் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பிரும்மானந்த ரெட்டி மேலும் கூறியதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் மரகதம் சந்திரசேகர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இன்று என்னைச் சந்தித்து, தமிழக நிலை குறித்து விவாதித்தனர். என்னுடன் பேசிக் கொண்டிரு ந்த ஒன்றரை மணி நேரத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள வறட்சி நிலை, மேற்கொள்ள வேண்டிய துயர் துடைப்புப் பணிகள், சில கட்சிகளின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும், கட்சி விவகாரங்கள் குறித்தும் குறிப்பிட்டனர். ...
பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இருவர் பஸ் ஏறி மரணம்
சென்னை, ஏப். 17- பஸ் ஸ்டாண்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு நபர்கள் பஸ் ஏறி மரண மடைந்தனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டில் நடந்தது. சம்பவம்பற்றி கூறப்படுவதாவது: பூந்தமல்லி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயவேலுவும் (26) வயது) ராஜேந்திரனும் (13 வயது). இவர்கள் ஒரு கோவில் திருவிழாவுக்குப் போய்விட்டு, இரவு பஸ் ஸ்டாண்டுக்குத் திரும்பினர். காலையில் பஸ் பிடித்துச் செல்வதற்காக அங்கேயே படுத்துத் தூங்கினார்கள்.
பல்லவன் பஸ் போக்குவரத்துக் கழக பஸ்ஸொன்றில் இயந்திரக் கோளாறு காரணமாக அதை கிளப்ப முடியவில்லை. அதை சில பயணிகள் தள்ளிக் கொண்டிருந்தனர். திடீரென்று பஸ் கிளம்பிவிட்டது. அருகில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு நபர்கள் மீதும் ஏறிவிட்டது. ஜெயவேலு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் ஆஸ்பத்திரியில் இறந்தார்.