8.6.1976: சுகாதியா த.நா. கவர்னராக நியமனம்
சுகாதியா த.நா. கவர்னராக நியமிக்கப்பட்டது பற்றி...
புதுடில்லி, ஜூன். 7 - ஆந்திர பிரதேச கவர்னர் மோகன்லால் சுகாதியா தமிழ்நாடு கவர்னராக கே கே. ஷாவுக்குப் பதில் நியமிக்கப்பட்டிருப்பதாக ராஷ்டிரபதி பவனிலிருந்து இன்றிரவு வெளியிட்ட அறிக்கை கூறியது.
பீஹார் கவர்னர் ஆர். டி. பண்டாரே ஆந்திர பிரதேச கவர்னராக சுகாதியாவிடமிருந்து பொறுப்பை ஏற்பார்.
ஹரியானா அட்வகேட் ஜெனரல் ஜகன்னாத கௌசல் பீஹார் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Advertisement
Advertisement
ராஷ்டிரபதி பவன் அறிக்கை கூறுவதாவது:- ஆந்திர பிரதேச கவர்னர் மோகன்லால் சுகாதியாவை தமிழ்நாடு கவர்னராகவும், பீஹார் கவர்னர் ஆர்.டி. பண்டாரேயை ஆந்திர பிரதேச கவர்னராகவும், ஜே. என். கௌசலை பீஹார் கவர்னராகவும் ராஷ்டிரபதி நியமித்திருக்கிறார்.
22 மாநிலங்களில் ஒரிஸ்ஸா - ஹரியானா ஆகிய இரண்டில் தற்போது கவர்னர்கள் இல்லை. ஒரிஸ்ஸா கவர்னர் அக்பர் அலிகான் சமீபத்தில் ராஜினாமா செய்து விட்டார். ஹரியானா கவர்னர் பி. என். சக்ரவர்த்தி மார்ச்சில் காலமானார். இவ்விரு மாநிலங்களின் ஹைகோர்ட் தலைமை நீதிபதிகள் ஆக்டிங் கவர்னர்களாக செயலாற்றி வருகின்றனர்.
10 கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டாய சமூக சேவை அமல்
சென்னை, ஜூன். 7- சென்னை பல்கலைக்கழகப் பிராந்தியத்தில் 40 கல்லூரிகளில் எல்லா பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும், பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம். மாணவர்களுக்கும் சமூக சேவையானது வருகிற கல்வி ஆண்டிலிருந்து கட்டாயமாக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா இன்று அறித்தார்.
என்.எஸ்.எஸ். புறக்கல்வித் திட்ட தலைவர்கள் பயிற்சித் திட்டத்தை அவர் ஸ்டெல்லா மேரி கல்லூரியில் துவக்கி வைத்துப் பேசினார். மாணவர்களின் சமூக சேவைப் பணியானது மொழி அல்லது மூன்றாவது குரூப்க்கு இணையானதாகக் கருதப்படும் என்று சமூக சேவைக்கான படிப்பு போர்டு தீர்மானித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
சமூக சேவைக்கு அதிகபட்சமாக 100 மார்க்குகள் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதில் "பாஸ்" செய்ய குறைந்தபட்சம் 40 மார்க் வாங்கியாக வேண்டும் என்று தெரிவித்தார். ...