3.7.1976: அடிப்படைக் கடமைகளில் ராணுவ சேவை - கடமைகளை மீறினால் தண்டனை வழங்க சட்டம் இயற்ற சிபாரிசு
அடிப்படைக் கடமைகளில் ராணுவ சேவையை சேர்க்க சிபாரிசு வழங்கப்பட்டிருப்பது பற்றி...
புது டில்லி, ஜூலை 2- பிரஜைகளுக்கான அடிப்படை கடமைகளில் தேவைப்படும் போது தேசிய சேவையும் ராணுவ சேவையும் புரிய வேண்டும் என்பதை சேர்க்க சுவரண் சிங் குழு சிபாரிசு செய்துள்ளது.
அரசியலமைப்பில் சேர்ப்பதற்கான 'அடிப்படை கடமைகள்" அத்யாயம் பற்றி பரிசீலித்த கமிட்டி, 8 அம்ச அடிப்படை கடமைகளை சிபாரிசு செய்துள்ளது. அதில் தேசத்தைப் பாதுகாப்பதும்; அழைக்கப்படும்போது ராணுவ சேவை உட்பட தேசிய சேவை செய்ய வேண்டும் என்பதும் அடங்கும்.
வகுப்புவாதத்தைக் கைவிட வேண்டும் என்பதும், அரசாங்கக் கொள்கையின் கட்டளைக் கோட்பாடுகளை அமல் நடத்துவதில் துணை புரிய வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.
Advertisement
Advertisement
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அரசின் கொள்கையாக்கும் வகையில் கட்டளைக் கோட்பாடுகள் விரிவுபடுத்தப்படவேண்டும் என்று யோசனை கமிட்டி கூறியுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சுவரண் சிங் தலைமையில் இக் கமிட்டியை காங்கிரஸ் அக்ராசனர் அமைத்திருந்தார். ஜூலை 12ந் தேதிக்குள் தங்களுடைய கருத்துக்களை அனுப்பும்படி காங்கிரஸ் முதல் அமைச்சர்களையும், பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவர்களையும் கமிட்டி கேட்டுக் கொண்டிருக்கிறது. யோசனைகளை தெரிவிக்கும்படி பொது மக்களை அழைத்துள்ளது. ஜூலை15ந்தேதி கமிட்டி கூடி தன்னுடைய யோசனைகளை இறுதியாக்கும்.
8 அம்ச அடிப்படை கடமைகள்
பிரஜைகளுக்காக கமிட்டி சிபாரிசு செய்துள்ள 8 அம்ச அடிப்படைக் கடமைகள் விவரம்:
(1) அரசியலமைப்பையும், சட்டங்களையும் பிரஜைகள் மதித்து நடக்கவேண்டும்.
(2) தேசத்தின் உரிமையைப் ஆதிபத்திய பாதுகாத்து, அதன் ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் நிலைநிறுத்தி பலப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.
(3) அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஜனநாயக அமைப்புகளை மதித்து, அதன் கண்ணியத்தையோ, அதிகாரத்தையோ பாதிக்கும் எதையும் செய்யாமலிருத்தல்.
(4) நாட்டைப் பாதுகாத்தல், அழக்கப்படும்போது சேவை உட்பட தேசிய ராணுவ சேவை செய்யவேண்டும்.
(5) எந்த வகையிலும் வகுப்பு வாதத்தைத் துறக்க வேண்டும்.
(6) அரசாங்கக் கொள்கையின் கட்டளைக் கோட்பாடுகளை அமல் நடத்துவதில் உதவியும், ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். சமூக, பொருளாதார நலனுக்காக மக்களின் பொது நலனை வளர்ப்பது.
(7) வன்முறையைத் தவிர்க்க வேண்டும். பொது சொத்துக்களைப் பாதுகாத்தல்; இந்தச் சொத்துக்களைச் சேதப்படுத்தவும், நாசம் செய்யவும் கூடிய எதையும் செய்யக் கூடாது.
(8) சட்டப்படி வரிகளைச் செலுத்த வேண்டும்.
இந்தக் கடமைகளின்படி நடக்காவிட்டால், அல்லது இந்தக் கடமைகளை அனுசரிக்க மறுத்தால் அபராதம் அல்லது உசிதமெனக் கருதப்படும் தண்டனையை விதிக்க பார்லிமெண்ட் சட்டத்தின் மூலம் வகை செய்ய வேண்டும் என்றும் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது. ...
விலைகளை கட்டுப்படுத்த மார்க்கெட்டுகளில் அரசு நேரடியாகத் தலையிடும் - மந்திரி சி.எஸ். அறிவிப்பு
பெங்களூர், ஜூலை. 2- நாட்டில் விலைவாசியை ஸ்திர நிலையில் வைத்திருக்க அரசாங்கம் கடந்த ஓராண்டு காலமாக இருப்பு சேர்த்து வைத்துள்ள சரக்குகளை விற்பனைக்குக் கொண்டு வருவதன் மூலம் மார்க்கெட்டுகளில் நேரடியாகத் தலையிடும் என்று மத்திய நிதி மந்திரி சி. சுப்பிரமணியம் இன்று அறிவித்தார்.
அரசாங்கம் 1 கோடியே 50 லட்சம் உணவு தான்யத்தை இருப்பு சேர்த்து வைத்துள்ளது. இது மார்க்கெட்டில் விலைவாசியை ஸ்திரப்படுத்தவும் ஹேஷ்ய பேரக்காரர்களை ஒடுக்கவும் அரசுக்கு சக்தி மிக்க ஆயுதமாக விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.
அரசிடம் உருக்கு, நிலக்கரி, எண்ணெய்கள், துணி போன்ற பல்வேறு பொருட்களும் இருப்பு உள்ளன. இவை சூது பேர ரீதியிலான விலை ஏற்றங்களைத் தடுக்க அரசுக்குப் போதுமான வசதியை அளிக்கின்றன என்று சொன்னார்.
தவிர அன்னியச் செலாவணி இருப்பும் அதிகரித்துள்ளது. இது சரியான நேரத்தில் பருத்தி, சமையல் எண்ணெய்கள் போன்றவற்றைத் தேவையான அளவுக்கு இறக்குமதி செய்வதற்கு உதவும் என்றார் சுப்பிரமணியம். ...
Military service included in fundamental duties – Recommendation to enact legislation to impose penalties for violation of duties.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.