முகப்பு
மனநல மருத்துவம்

படிப்பில் பின் தங்கும் மாணவர்கள்!

ஒரு சிறுவன் கல்வியில் பின்தங்குவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்…? ஏன் பாடப் புத்தகங்களைக் கண்டால்

Updated On : 10 செப்டம்பர் 2016, 3:42 pm IST
பகிர்:

ஒரு சிறுவன் கல்வியில் பின்தங்குவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்…? ஏன் பாடப் புத்தகங்களைக் கண்டால் அவனுக்கு அவ்வளவு வெறுப்பு ஏற்படுகிறது? இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கலாம்?

மேற்சொன்ன கேள்விக்கான பதிலை எளிதாகச் சொல்லிவிட முடியாது. அது குழந்தையின் உடல்நலன் அல்லது மனநலன் தொடர்புடையதாக இருக்கலாம். குடும்பம் அல்லது நண்பர்கள் வட்டத்தினால் ஏற்பட்டிருக்கலாம். அல்லது மொழி, பாடத்திட்டம் மற்றும் ஆசிரியரின் கற்பிக்கும் தன்மை சார்ந்ததாக இருக்கலாம்.

இவை அனைத்துமே சிறு சிறு துளிகளாகச் சேர்ந்து பெரிய அளவில் பின்னடைவையும் உருவாக்கியிருக்கலாம். இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்த பிறகு, ஒன்றுமே இல்லை எனில், குழந்தையின் புத்திசாலித்திறனை அளவிடலாம். அதுவும் வயதையொட்டி, சூழ்நிலை கலாச்சாரத்திற்கு ஏற்ப இயற்கையாக அல்லது மிகையாக உள்ளது எனில் கற்கைக் குறைகள் என்றழைக்கப்படும் Learning Disorder ஆக இருக்கக்கூடும்.

Advertisement

Advertisement

கற்கைக் குறைகள் என்பதே மாணவனிடம் காணப்படும் ‘ஒருவித எதிர்பாராத தன்மை; அதாவது, மிகச் சுறுசுறுப்பாக செயல்பட்டுவிட்டு, மேதாவியாகப் பேசிவிட்டு எழுதுவதிலும் படிப்பதிலும் மிகவும் பின்தங்கி காணப்படும் தன்மை. இதைக் கண்டறிவதற்கு குழந்தையிடம், சிறுவனிடம் காணப்படும் எதிர்பாராத விளக்கம் அளிக்க இயலாத தன்மை - அறிவுத்திறன் அதிகம் காணப்படும் பள்ளிச் செயல்பாடுகளில் எழுதுவதில் படிப்பதில் பின்தங்கிய நிலை - நிரூபிக்கப்பட வேண்டும். அதற்குள் குழந்தை தொடக்கக் கல்வியின் பின்பகுதியை எட்டிவிடும். சிலர் உயர்நிலைக் கல்வியைக்கூட அடைந்துவிடுவர். இன்னும் ஒரு சிலரோ, மேல்நிலைக் கல்வி, சில நேரங்களில் கல்லூரிக் கல்வியையே அடைந்துவிடுகின்றனர்.’

இது எவ்வாறு சாத்தியம் என மூளை இயக்கவியல் அறிவியலார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்து வந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள அதிநவீன அறிவியல் வளர்ச்சியால் உயிருள்ள மூளை இயங்குவதை அப்படியே FMRI அல்லது PET Scan மூலமாகப் பார்த்துவிட முடியும். இந்த கற்கைக் குறைகள் உடைய குழந்தைகளின் இடது மூளையின் பின்பகுதியில் மற்ற சாதாரண குழந்தைகளில் படிக்கும் பொழுது ஏற்படும் தூண்டுதல் போன்று நடைபெறவில்லை. ஆனால் இந்தக் குழந்தைகளை இனம் கண்டறிந்து சிறிய வயதிலேயே குறைதீர்க் கல்வியை (Remedial Education) அளித்தால், மூளையின் பிற பகுதிகள் தூண்டப்பட்டு, கல்வித் தொடர்புடைய எழுதுதல், படித்தல் போன்ற செயல்களில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும்.

எல்லாக் குழந்தைகளையும், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது. ஏனெனில் ஒரு சிறுவனுக்கு ஸ்கேன் செய்யவே சில நாட்கள் ஆகலாம். ஒரு சாதாரண MRI ஸ்கேன் செய்யவே 30 நிமிடங்கள் முதல் சில மணிநேரங்கள் தேவைப்படும் பொழுது, இதுபோன்ற பரிசோதனைகள் ஒரு சவாலான விஷயம்தான். பின் எவ்வாறு கண்டறிவது?

குழந்தை, கல்வியில் பின்தங்கிய பிறகு, அவனைப் பிடித்து காரண காரியங்களை அலச வேண்டும். பிறகு தெரிந்த அல்லது சந்தேகத்துக்கு உட்பட்ட அனைத்துக் காரணிகளையும் சீர்செய்ய வேண்டும். குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பின்னரும் கல்வியில் முன்னேற்றம் அடையவில்லையெனில், ‘கற்கைக் குறைகள்’ என சான்றிதழ் தந்து சிறப்புக்கல்வி பயில அல்லது குறைதீர்க் கல்வி பயில பரிந்துரைக்க வேண்டும். ஆனால், இதற்குள் தங்கமான நேரம் விரயமாகி விடுமே. என்ன செய்வது? இந்த நேர விரயத்தைத் தவிர்க்க, அமெரிக்காவில் புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை ‘RTI-Response to Instruction’ என அழைக்கிறார்கள்.

இந்தக் கல்விக் கொள்கை ஏற்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆசிரியரும் முதல்கட்டமாக தனது கற்பித்தலுக்குப் பிறகு ஒவ்வொரு மாணவனிடமும் எவ்வளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது? எவ்வளவு தூரம் கற்றுத்தேறியிருக்கிறான்? என ஆய்ந்தறிய வேண்டும். மற்ற மாணவர்களைவிட, பள்ளி சராசரியைவிட குறைவாக செயலாற்றும் மாணவர்களைக் கண்டறிந்து, இரண்டாம் கட்டமாக மிகுந்த சிரத்தையுடன் மாணவர்களின் தன்மைக்கேற்ப அவர்களுக்குப் பிடித்த வகையில், புரியும் வகையில் பாடங்களை மெருகூட்டி, சுவை கூட்டி கற்பிக்க வேண்டும். அதற்காக பலவிதமான கற்பித்தல் முறைகளையும் கையாளலாம்.
இதற்கெல்லாம் பின்னரும்கூட சிறுவன் கல்வியில் முன்னேற்றம் காணவில்லை எனில், அவனை சிறப்புக் கல்வி பயில அல்லது மேற்கொண்டு அவனது தனிப்பட்ட பிரச்சனைகளை அலசி ஆராய கல்வி மற்றும் உளவியல் நிபுணர்களிடம் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டாம் கட்ட கற்பித்தல் முயற்சிக்குப் பிறகு முன்னேற்றம் அடையாத குழந்தைகளை - சிறுவர்களை பல்துறை நிபுணர் குழு ஆராயும். மேற்கொண்டு செய்ய வேண்டிய, குழந்தைக்குத் தேவையான செயல்களைப் பரிந்துரை செய்யும். அதனை ‘தனி மாணவ கல்வித் திட்டம்’ (Individualised Educational Programme - IEP) என்கிறார்கள். இந்த RTI (Response to Instruction) முறையினால் முக்கியமாக காலவிரயம் தடுக்கப்படுகிறது. ‘Wait to fail’ தவிர்க்கப்படுகிறது.

இந்த RTI கல்வி முறையினால், கற்பித்தலை தரம் உயர்த்துகிறார்கள். இதன்மூலம் சிறப்புக் கல்விக்கு பரிந்துரைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். இந்த RTI கல்விமுறை குறித்து பல மேம்பட்ட ஆய்வுகள் அமெரிக்காவில் உள்ள குழந்தை நல மற்றும் மனிதவள ேமம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்றுள்ளன. லியான் மற்றும் அவரது அறிவியல் குழுவினர் இந்த புதிய கல்வி முறையினால், தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் காணப்படும் ‘வாசிக்கும் சிரமங்கள்’ 70% குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

கற்கைக் குறைகளைப் பற்றி மட்டும் ஆராய்வதற்கு என்றே அமெரிக்காவில் ‘தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனம்’ ஒன்றை நிறுவி உள்ளனர். கற்கைக் குறைகள் குறித்த அனைத்து ஆய்வுகளிலும், மாணவனின் கல்வித்திறனை ஆராயும் முன் அவனது மொழித்திறனை ஆராய்ந்து அது கல்வி பயில போதுமானதா என்றும் உறுதி செய்கின்றனர்.

மனநல மருத்துவத்தின் பங்கு என்ன?

கற்கைக் குறைகளுக்கான தீர்வு முக்கியமாக கல்வித்துறை மற்றும் கல்விக் கொள்கை சீர்திருத்தத்திலேயே உள்ளது. பொதுவாக கற்கைக் குறைகள் தனித்து மாணவர்களிடம் காணப்படுவதில்லை. வேறு சில பிரச்சனைகள் ‘நிலைகொள்ளா கவனச் சிதைவு நிலை’ (ADHD-Attention deficit hyperactivity disorder), நடத்தைக் குறைபாடு (Conduct Disorder), எதிரடிக்கும் மனநிலை (ODD-Oppositional Defiant Disorder), மனச்சோர்வு, பதட்டம், எண்ணச்சுழல் வியாதி (OCD-Obsessive compulsive disorder) எனப் பலவகையான மனநலச் சிக்கல்களுடன் அடிக்கடி சேர்ந்தே காணப்படுகிறது. இவற்றில் சிலவற்றை மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். மற்றும் சிலவற்றை நடத்தைச் சீரமைப்பு சிகிச்சையினாலோ அல்லது எண்ணச் சீரமைப்பு சிகிச்சையினாலோ மேம்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.