முகப்பு
இந்தியா

கருப்புப் பண வழக்கில் மதுகோடாவுக்கு ஜாமீன்

கருப்புப் பண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கும்,

Updated On : 2 மார்ச், 2013 at 1:13 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

கருப்புப் பண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கும், அவரது உதவியாளர் விகாஸ் குமார் சின்ஹாவுக்கும் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

எனினும், மதுகோடா மீது லஞ்சம் பெற்றது உள்ளிட்ட வேறு சில வழக்குகள் இருப்பதால் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து, ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு, மதுகோடாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதே சமயம், ஜாமீனில் விடுவிப்பதற்கான நிபந்தனைகளை கருப்புப் பண வழக்கை விசாரித்து வரும் ராஞ்சி விசாரணை நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement

தனது ஜாமீன் மனுவில், கருப்புப் பண வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதை மதுகோடா சுட்டிக்காட்டியிருந்தார். இதை கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

ரூ. 3,549 கோடி கருப்புப் பணம் தொடர்பாக 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி மதுகோடா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்தத் தொகையில் ரூ.1,340 கோடி, சட்டவிரோதமாக செய்யப்பட்ட முதலீடுகள் என்று மதுகோடா மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

இந்த கருப்புப் பண விவகாரத்தில் அனில் பஸ்டாவதே என்பவர் மதுகோடாவின் சார்பாக துபை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சொத்துகளை வாங்கிக் குவித்ததாகவும், முதலீடுகளை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக அனில் பஸ்டாவதே இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு,  இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் இப்போது ராஞ்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது நினவுகூரத்தக்கது.

மற்ற வழக்குகள்: கருப்புப் பண வழக்கு தவிர, தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு, வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கு, வனத்துறை சார்பில் தடையில்லாச் சான்றிதழ் அளிக்க லஞ்சம் பெற்ற வழக்கு ஆகியவற்றில் மதுகோடாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

வருமான வரி ஏய்ப்பு, பலாமு மற்றும் தும்கா மாவட்டங்களில் மின்சாரத் திட்டங்களை அமல்படுத்தியதில் ஊழல் ஆகிய வழக்குகளில் மதுகோடாவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

பல்வேறு வழக்குகளுக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் மதுகோடா அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.