முகப்பு
இந்தியா

கர்நாடக தேர்தல்: தமிழக அதிகாரிகள் உள்பட 60 பார்வையாளர்கள் நியமனம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான "போலீஸ் பார்வையாளர்களாக' தமிழக போலீஸ் உயரதிகாரிகள் உள்பட சுமார் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 1:45 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான "போலீஸ் பார்வையாளர்களாக' தமிழக போலீஸ் உயரதிகாரிகள் உள்பட சுமார் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 8-ம் தேதி நடைபெறுகிறது.

அதையொட்டி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

அவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்தல் பணி தொடர்பான அறிமுகக் கூட்டம் சில நாள்களாக தில்லியில் நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டங்கள் நடைபெற்றன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் டிஐஜிக்கள் டாக்டர் ஜி. தினகரன், பி. சக்திவேல், ஏ.ஜி. மௌரியா, டாக்டர் எம்.சி. சாரங்கன், செ. சந்திரசேகர், ஏ. பாரி உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், "தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு, தேர்தல் பிரசார விதி மீறல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மாவட்ட போலீஸ் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

கர்நாடகத்தில் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு ஒரு "பொது பார்வையாளர்' என்ற வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மத்திய அரசுப் பணியில் இணைச் செயலர், கூடுதல் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் ஆவர்.

"தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பார்வையாளர்களாக' ஐஆர்எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள வருமான வரித் துறை, மத்திய கலால் துறை, வருவாய் புலனாய்வு துறையைச் சேர்ந்த அதிகாரிகளாவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.