முகப்பு
இந்தியா

மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய இயலாது

"பொது நலனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய இயலாது' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

Updated On : 2 மே 2013, 2:32 am IST
பகிர்:

"பொது நலனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய இயலாது' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும், "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை இடமாற்றம் செய்யக் கூடுதலாக ஐந்து மாதங்கள் அவகாசம் தேவை' என்றும் தமிழக அரசு அந்த மனுவில் கோரியுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எம். லோதா, மதன் பி. லோகுர், குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் பிரசாத் ஆஜராகி மாநில அரசின் பதில் மனுவை தாக்கல் செய்வதாக கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் "முறைப்படி உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் மனுவை தாக்கல் செய்யுங்கள்' என்று அறிவுறுத்தி வழக்கின் அடுத்த விசாரணையை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையடுத்து, தமிழக அரசு வழக்குரைஞர் பி. பாலாஜி நீதிமன்றப் பதிவாளரிடம் புதன்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவின் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் 1,731 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. அவற்றில் 839 மதுக் கடைகள் மார்க்கெட் பகுதிகளில் உள்ளன.

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 100 மீட்டர் அருகாமையிலும், முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதிகள், முனிசிபல் பகுதிகளில் 50 மீட்டர் தொலைவிலும் மதுக்கடைகள் அமைக்கக்கூடாது என்று தமிழக அரசு விதிமுறைகளை இயற்றியுள்ளது. இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட பிறகே டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளனவே தவிர, லாப நோக்கத்தில் அல்ல.

மார்க்கெட் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை இடமாற்றம் செய்தால், அதைக் குடியிருப்புப் பகுதிகள் அல்லது தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குத்தான் மாற்றம் செய்ய முடியும்.

இதனால், குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்படும். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளுக்கு மாற்றம் செய்தால் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை மதுக் கடைகளில் செலவிடும் நிலைதான் உருவாகும்.

மக்களின் தேவைக்காக இந்த கடைகள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில், குடியிருப்புப் பகுதிகள், தொழிற்சாலைப் பகுதிகளில் மதுக் கடைகளை அமைத்தால் அது பொது நலனுக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆகையால், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய இயலாது.

ஐந்து மாதம் தேவை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை முடிக்கக் கூடுதலாக ஐந்து மாதங்கள் தேவைப்படும்.

பிற மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுபானங்களை விற்பனை செய்யும் விவகாரத்தில், பொதுமக்களின் நலனைக் கருதி தமிழக அரசு அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னணி: தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதைப் பரிசீலித்த நீதிமன்றம், தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை அகற்றக் கூடுதல் அவகாசம் வழங்க முடியாது என்று கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கூறியது. அப்போது பிறப்பித்த உத்தரவின்படி மேற்கண்ட விவரங்கள் அடங்கிய பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.