முகப்பு
இந்தியா

இதய அறுவை சிகிச்சை பெற செளதாலாவுக்கு ஜாமீன்

இதய அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் செளதாலாவுக்கு ஆறு வார கால ஜாமீன்

Updated On : 22 மே 2013, 2:26 am IST
பகிர்:

இதய அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் செளதாலாவுக்கு ஆறு வார கால ஜாமீன் அளித்து தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

2000-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் 10 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஹரியாணாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் செளதாலா. அவரது மகன் அஜய் செüதாலா உள்பட மொத்தம் 54 பேர் இவ்வழக்கில் தண்டனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஓம்பிரகாஷ் செüதாலாவுக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை செய்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Advertisement

Advertisement

இதனை விசாரித்த நீதிபதி சித்தார்த் மிருதுள் செவ்வாய்க்கிழமை செளதாலாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் உத்தரவில் அவர் குறிப்பிட்டது:

செளதாலாவின் மருத்துவ அறிக்கையை பார்க்கும்போது, அவரது சிகிச்சையின் பொருட்டு ஆறு வார காலத்துக்கு ஜாமீன் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஜாமீனில் வெளியான 24 மணி நேரத்துக்குள் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும். அவருடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆறு வார காலத்துக்கு நீதிமன்ற அனுமதியின்றி அவர் தில்லி தலைநகர் பகுதியைவிட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டார். ஜாமீன் காலத்தில் செளதாலா பத்திரிகைகளுக்கு பேட்டி எதுவும் தரக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சிபிஐ கோரியதை நீதிபதி ஏற்கவில்லை.

செளதாலாவின் அடிப்படை உரிமையை எவ்வாறு தடை செய்ய முடியும் என கேட்ட நீதிபதி, ஜாமீன் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு நிபந்தனை மீறப்பட்டாலும் ஜாமீனை ரத்து செய்யுமாறு சிபிஐ கோரலாம் என்று நீதிபதி மிருதுள் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.