உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விரைவுப் பேருந்து: ஓட்டுநர் உள்பட 9 பேர் காயம்
உளுந்தூர்பேட்டை அருகே அரசு விரைவுப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 9 பேர் காயமடைந்தது குறித்து...
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே அரசு விரைவுப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 21 பயணிகளுடன் அரசு விரைவுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சிவகுரு(59) ஓட்டி வந்தார்.
பேருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது முன்னே சென்ற தனியார் சொகுசுப் பேருந்தின் ஓட்டுநர், அரசு விரைவுப் பேருந்தை உரசியவாறு அணைத்து ஓட்டிச் சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவுப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தை ஓட்டிச் சென்ற சிவகுரு, 3 ஆண்கள், 4 பெண்கள், ஒருபெண் குழந்தை என 9 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 9 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சாலையோரத்தில் கவிழ்ந்த அரசு விரைவுப் பேருந்தை மீட்பு வாகனம் கொண்டு மீட்கும் பணியையும் போலீஸார் மேற்கொண்டனர்.
விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Express bus overturns into roadside ditch near Ulundurpet; 9 injured, including the driver
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.