முகப்பு
இந்தியா

இந்திய நலனுக்கு எதிராக சீனா ஒருபோதும் செயல்படாது: பிரணாப் முகர்ஜியிடம் லீ கெகியாங் உறுதி

இந்தியாவின் நலனுக்கு எதிராக சீன அரசு ஒருபோதும் செயல்படாது என்று சீன பிரதமர் லீ கெகியாங் கூறினார். இந்தியாவில் சுற்றுப் பயணம்

Updated On : 22 மே 2013, 2:35 am IST
பகிர்:

இந்தியாவின் நலனுக்கு எதிராக சீன அரசு ஒருபோதும் செயல்படாது என்று சீன பிரதமர் லீ கெகியாங் கூறினார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் லீ கெகியாங்,செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகைய உறுதிமொழியை அவர் அளித்தார்.

சீனாவின் மிகச் சிறந்த வர்த்தகக் கூட்டாளி நாடாகத்தான் இந்தியாவைப் பார்க்கிறோம். இத்தகைய சூழலில் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டோம் என்று அவர் கூறினார். இந்தியாவுடனான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவே சீனா விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பிரதமராகப் பதவியேற்றபிறகு முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்காக லீ கெகியாங்கை பிரணாப் முகர்ஜி வெகுவாகப் பாராட்டினார். இதிலிருந்தே இந்தியாவின் மீது சீனாவுக்குள்ள அக்கறை வெளிப்படுவதாகவும் முகர்ஜி குறிப்பிட்டார். இரு நாடுகளிடையே பாயும் நதியிடையே பல ஒற்றுமை உள்ளது. இந்த ஆறு ஒரு போதும் இரு நாட்டு மக்களையும் கூறுபோடாது என்று தான் உறுதியாக நம்புவதாக முகர்ஜி, சீன பிரதமரிடம் எடுத்துக் கூறினார்.

Advertisement

Advertisement

21-ம் நூற்றாண்டில் ஆசிய பிராந்தியத்தில் இரு பெரும் நாடுகளான இந்தியா, சீனா இடையிலான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்தியாவைப் பொறுத்தமட்டில்  உண்மையான அண்டை நாடாக சீனாவுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. இரு நாடுகளுக்கும் பொதுவான விஷயங்களில் பரஸ்பரம் உதவிக் கொள்வதையே இந்தியா விரும்புவதாகவும், அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் முகர்ஜி சுட்டிக் காட்டினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெற்று சென்ற சீன பிரதமருக்கு மகாத்மா காந்தி பற்றிய நூல்களை பிரணாப் முகர்ஜி பரிசாக அளித்தார். இதற்கு நன்றி தெரிவித்த சீன பிரதமர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சீனாவுக்கு வருகை தரும்போது அவருக்கு தாம் சில நூல்களை பரிசளிக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.