"தெலங்கானாவுக்காக டிஆர்எஸ் கட்சியில் சேர்ந்தேன்'
தெலங்கானா மாநிலம் பெற வேண்டும் என்பதற்காகவே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சேர்ந்ததாக காங்கிரஸ் தலைவர் கேசவராவ் (படம்) தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம் பெற வேண்டும் என்பதற்காகவே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சேர்ந்ததாக காங்கிரஸ் தலைவர் கேசவராவ் (படம்) தெரிவித்தார்.
தெலங்கானா கோரிக்கைக்காக இடையறாது போராடும் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவின் விடாமுயற்சிதான் தானும் 2 காங்கிரஸ் எம்.பி.க்ளும் தாங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிர சமிதியில் சேருவதற்கு காரணமாக அமைந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
Advertisement
Advertisement
தெலங்கானா கோரிக்கைக்காக போராடுவோர் அனைவரையும் ஓரணியில் திரட்ட டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் பாடுபட்டு வருகிறார். தெலங்கானா தனி மாநில கோரிக்கைக்காக டிஆர்எஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைக்கவும் அவர் தயாராக இருந்தார். அந்த அளவுக்கு அவர் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவதில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார்.
தெலங்கானா தனி மாநில கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை. இக்கோரிக்கையை நிறைவேற்றுமா என பாஜகவை அணுகி பேசிப் பார்த்தேன். ஆனால் டிஆர்எஸ் கட்சியின் மதச்சார்பின்மை தன்மை காரணமாக அக்கட்சியில் சேர முடிவு செய்தேன்.
தெலங்கானா பிராந்தியத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர் காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்கள்தான் தனி தெலங்கானா உருவாக தடையாக இருக்கிறார்கள்.
நாகர்கர்னூல் எம்.பி.யான மந்தா ஜகந்நாதம் பேசுகையில், எலூரு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி.யான கே. சாம்பசிவராவ் மத்திய அமைச்சரவையில் இடம் கிடக்காததையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். காங்கிரஸ் கட்சி மேலிடம் அவரை உடனடியாக அழைத்துப்பேசி சமாதானம் செய்தது. ஆனால், தனி தெலங்கானா பற்றி அறிவிக்க தெலங்கானா எம்.பி.க்கள் கெடு விதித்தும் காங்கிரஸ் கட்சி மேலிடம் அதை பொருட்படுத்தவில்லை, கட்சியை விட்டு விலகுகிறோம் என்று கூறியபோதிலும் எங்களை அழைத்துப்பேசவில்லை. இதை நாங்கள் அவமானமாகக் கருதுகிறோம். காங்கிரஸ் கட்சி தெலங்கானா எதிர்ப்பு கட்சியாகிவிட்டது என்றார்.
பெத்தபள்ளி எம்.பி.யான ஜி.விவேகானந்தம் பேசுகையில் தெலங்கானாதான் வேண்டும் அதற்காக எந்த பதவியையும் துறக்க தான் தயார் என்றார்.
இதற்கிடையில் சனிக்கிழமை முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்துப் பேசிய பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தனம் நாகேந்தர், 2 தெலங்கானா எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி டிஆர்எஸ் கட்சியில் சேரும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தனி தெலங்கானா அமைக்க காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திவருகிறது. அப்பிரச்னை பற்றி காங்கிரஸ் இறுதி முடிவெடுக்கும்வரை இந்த எம்.பி.க்கள் அவசரப்படாமல் இருக்க வேண்டும். காங்கிரஸ் காரியக்கமிட்டி அடுத்த கூட்டத்தில் தெலங்கானா பிரச்னை பற்றி விவாதிக்கக்கூடும். தனி தெலங்கானா கோரிக்கைக்காக பிராந்திய கட்சியான டிஆர்எஸ் கட்சியை மாநில கட்சியான தெலுங்குதேசம் கட்சியுடன் இணைக்கத்தயார் என டிஆர்எஸ் எம்எல்ஏ ஹரீஸ் ராவ் கூறுவது கேலிக்குரியது. இப்படிச் செய்தால் எல்லாம் தனி தெலங்கானா கிடைத்துவிடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.