அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு
நாட்டின் முப்படைத் தலைவரை நியமிப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் முப்படைத் தலைவரை நியமிப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: முப்படைத் தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் அவசரம் காட்டவில்லை. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நரேஷ் சந்திரா குழு முப்படைக்கான தலைவர் பதவியை நியமனம் செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையிலான குழுவிடமும் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையும் அரசியல் கட்சிகள் அளிக்கும் கருத்துகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இவற்றின் அடிப்படையில் முப்படைத் தலைவர் நியமனம் குறித்து ஏ.கே.அந்தோனி இறுதி முடிவெடுப்பார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.