முகப்பு
இந்தியா

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: 3 அமைச்சர்கள் ராஜிநாமா

தெலங்கானா தனிமாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திரம், ராயலசீமாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் வியாழக்கிழமை ராஜிநாமா செய்தனர்.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 4:59 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

தெலங்கானா தனிமாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திரம், ராயலசீமாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் வியாழக்கிழமை ராஜிநாமா செய்தனர்.

தெலங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திர மாநில அமைச்சர்கள் கண்டா ஸ்ரீனிவாச ராவ், எரசு பிரதாப் ரெட்டி, டி.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்து முதல்வரிடம் கடிதம் அளித்தனர்.

இதுதொடர்பாக முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கு கண்டா ஸ்ரீனிவாச ராவ் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது: மக்களின் விருப்பத்துக்கு மாறாக மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமீபத்திய நடவடிக்கையால் (மாநிலத்தை பிரிப்பது), நான் அமைச்சர் பதவியில் தொடர எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஒன்றுபட்ட ஆந்திரத்தை விரும்பும் மக்களால் சட்டப்பேரவைக்கு நான் தேர்ந்து எடுக்கப்பட்டவன். மத்திய அரசின் முடிவை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே என் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

பின்னர், முதல்வரின் முகாம் அலுவலக வளாகத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் மூன்று பேர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளோம். மற்றவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

முகாம் அலுவலகத்தில் அமைச்சர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்டியிருந்தார். மூன்று அமைச்சர்கள் தவிர 19 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலிடத்தின் எச்சரிக்கையை அடுத்து மற்ற 15 அமைச்சர்கள் விலகல் முடிவை கைவிட்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் மற்றும் 4 மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செயலாளரிடமும், எம்எல்சிகள் பேரவை கவுன்சில் தலைவரிடமும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை வழங்கி உள்ளனர்.

ஜே.சி. திவாகர் ரெட்டி, கதே வெங்கட் ரெட்டி, தகுபட்டி வெங்கடேஸ்வர ராவ், வெங்கட்ராமைய்யா, முரளி கிருஷ்ணா, உக்ரநரசிம்ம ரெட்டி, பங்காரு உஷாராணி, கே.சுதாகர் மற்றும் சி.ஆதி நாராயண ரெட்டி ஆகியோர் ராஜிநாம் செய்த எம்எல்ஏக்கள் ஆவர். முகமது ஜானி, ருத்ரராஜு பத்மா ராஜு, கதே ஸ்ரீ நிவாசலு நாயுடு மற்றும் பலதுகு வெங்கட் ராவ் ஆகியோர் ராஜிநாமா செய்த எம்எல்சிகள் ஆவர்.

இதுதவிர, கே.நாகேஸ்வர ராவ் எம்எல்ஏ தனது ராஜிநாமா கடிதத்தை ஆந்திர காங்கிரஸ் தலைவர் போட்சா சத்யநாராயணாவிடம் வழங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.