முகப்பு
இந்தியா

ஒடிசா பேரவையில் கடும் அமளி: முதல்வர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

புவனேசுவரம் சாலியா சாஹி குடிசைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஒடிசா சட்டப்பேரவையில் புதன்கிழமை கடும் அமளி ஏற்பட்டது.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 2:14 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

புவனேசுவரம் சாலியா சாஹி குடிசைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஒடிசா சட்டப்பேரவையில் புதன்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தலைநகரில் நடந்த சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரவைத் தலைவர் பிரதீப் குமார் அமாத் இரு முறை அவையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவையின் பூஜ்ய நேரத்தின்போது இந்த பிரச்னையை பாஜக உறுப்பினரும் கட்சியின் மாநிலத் தலைவருமான கே.வி.சிங்தேவ் எழுப்பினார். "சிறுமியின் பெற்றோரின் அனுமதியின்றி இரவு 9 மணிக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ. 20 ஆயிரத்தை அளித்துவிட்டு பலியான சிறுமியின் பெற்றோரின் வாயை மூடப் பார்க்கிறது அரசு' என்று சிங்தேவ் பேசினார்.

பாஜக பேரவைக் கட்சித் தலைவர் ஜெய்நாராயண் மிஸ்ரா, சட்டம் தனது பணியை மேற்கொள்வதற்கு மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று குறிப்பிட்டார். இதையடுத்து பிஜு ஜனதாதள அரசை பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் உறுப்பினருமான பூபீந்தர் சிங் தாக்கிப் பேசினார்.

Advertisement

"தில்லியில் துணை மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் மன்னிப்பு கோரினர். தலைநகரில் நடந்திருக்கும் இந்த சம்பவத்துக்கு அவையில் முதல்வர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்' என பூபீந்தர் சிங் வலியுறுத்தினார். அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர் அனுப் சாய் பேசினார்.

"இந்த சம்பவத்துக்கு, ஆளுங்கட்சி தரப்பும் மிகவும் வேதனை தெரிவித்துக் கொள்கிறது. இத்தகைய கேவலமான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதற்கு கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும்' என்று முன்னாள் அமைச்சரும், பிஜு ஜனதாதள உறுப்பினருமான பிரதீப் மகாரதி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் 4 பேர் அவையின் மையப் பகுதிக்குச் சென்று தர்னாவில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் அமரும் மாடத்திலும் ஏற அவர்கள் முயன்றனர்.

எனினும், "இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் அவையில் அறிக்கை தாக்கல் செய்வார்' என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தர்னாவை விலக்கிக் கொண்டனர்.

முதல்வர் அறிக்கை: பிறகு அவையில் அமைதி நிலவியதையடுத்து, முதல்வர் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். இச்சம்பவத்தால் பெரிதும் வருத்தமடைந்துள்ளேன். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை அவசரமாகக் கருதி விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

புவனேசுவரத்தில் உள்ள சாலியா சாஹி குடிசைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். தினக்கூலியாக வேலை செய்துவரும் இளைஞர் ஒருவரால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.