முகப்பு
இந்தியா

குஜராத் கலவரம் துரதிருஷ்டமானது: ராஜ்நாத்சிங்

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் துரதிருஷ்டமானது; அதற்காக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டுவது நியாயமல்ல என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் கூறினார்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 7:44 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் துரதிருஷ்டமானது; அதற்காக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டுவது நியாயமல்ல என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் கூறினார்.

பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய நிர்வாகக்குழு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூடியது. இதில் பேசிய ராஜ்நாத்சிங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது: குஜராத்தில் நடந்த கலவரத்தை நியாயப்படுத்தவில்லை. இது துரதிருஷ்டமானது. ஆனால், இக்கலவரத்தை வைத்துக் கொண்டு சில அரசியல் கட்சிகள் மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன. மற்ற மாநிலங்களைப்போல குஜராத்தும் ஓர் மாநிலம். அங்கு நடந்த கலவர சம்பவம் துரதிருஷ்டமானது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதற்காக மோடியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இது சரியல்ல. இதனால் அவர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். அதை அவரது முகத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். இதற்கு மக்கள் காரணமில்லை. சில அரசியல் கட்சிகள்தான் மோடியைத் தனிமைப்படுத்த இவ்வாறு குற்றம்சாட்டுகின்றன. கலவரத்துக்குப் பின்னால் மோடி இருப்பதாக தொடர்ந்து செய்தி பரப்பி வருகிறார்கள்.

இஸ்லாமியர்களிடம் பாகுபாடா?: குஜராத் அரசு பாகுபாடு காட்டுகிறதா என்பதை அந்த மாநிலத்தில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் கேளுங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி இப்பிரச்னையை வைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது. ஆங்கிலேயர் எப்படி நம்மிடையே பிளவை ஏற்படுத்தினார்களோ அதே கொள்கையை காங்கிரஸýம் கடைப்பிடிக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்த விஷ விதையை தூவுகின்றன. ஆங்கிலேயரின் வேறு கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ ஆனால், பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸார் கடைப்பிடிக்கிறார்கள்.

Advertisement

பாஜக குறித்து இவ்வாறு தவறான பிரசாரத்தை சில அரசியல் கட்சிகள் மேற்கொள்வதால் பாஜகவில் உள்ள சிறுபான்மை தலைவர்களுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களால் பாஜகவின் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடையே பிரசாரம் செய்ய முடியவில்லை. மற்ற அரசியல் கட்சிகளைப்போல பாஜக அவர்கள் மீது அவதூறுகளை பரப்பாது.

எந்த மக்கள் மீதும் வெறுப்பு காட்ட வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை அல்ல. நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் அதைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். கலாசார தேசியம் வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை.

சிறுபான்மைத் தலைவர்களுக்குப் பாராட்டு: பாஜகவில் தீவிரமாக செயல்படும் நஜ்மா ஹெப்துல்லா, முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன் போன்ற தலைவர்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் இவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டுவரும் காங்கிரஸ் கட்சி, இந்து-முஸ்லிம்களிடையே உறவு மேம்பட எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை. இது அவர்களது பொறுப்பு இல்லையா?

திருப்பிவிடப்பட்ட 900 கோடி ரூபாய்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மையினர் நலனுக்காக பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கியது. ஆனால், அதில் 900 கோடி ரூபாய் அவர்களது நலனுக்கு செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்காக அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்காக பலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதை அம்மக்கள் பாராட்டினார்கள்.

பொருளாதாரம் மோசமாகும்: ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும்போது நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் என்றார் ராஜ்நாத்சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.