"புகையிலையில்லா சமுதாயம் அமைய பல்துறை முயற்சிகள் தேவை'
பொருளாதாரத்துக்கும், சமுதாயத்துக்கும் கடுமையான பாதிப்புக்களை உண்டாக்கும் புகையிலையை ஒழிக்க வேண்டுமானால், அதன் உற்பத்தியையும், தேவையையும் குறைக்கும் வகையில் பல்வேறு துறையினரும் இணைந்து கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பொருளாதாரத்துக்கும், சமுதாயத்துக்கும் கடுமையான பாதிப்புக்களை உண்டாக்கும் புகையிலையை ஒழிக்க வேண்டுமானால், அதன் உற்பத்தியையும், தேவையையும் குறைக்கும் வகையில் பல்வேறு துறையினரும் இணைந்து கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற "21ஆம் நூற்றாண்டின் பொது சுகாதார முன்னுரிமைகள்: புகையிலை ஒழிப்பு' என்ற சர்வதேசக் கருத்தரங்கில், விடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசியது:
கடந்த 20ஆம் நூற்றாண்டில் 10 கோடி பேரின் உயிரை புகையிலை பறித்துள்ளது. இந்த நூற்றாண்டிலாவது அதனை உறுதியுடன் போராடி ஒழிக்காவிட்டால் இன்னும் 100 கோடி பேரின் உயிரை புகையிலை பறித்துவிடும்.
Advertisement
புகையில்லா சமுதாயத்தை உருவாக்குவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. புகையிலையைக் கட்டுப்படுத்த நாடாளுமன்றத்தில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 33 மாநிலங்கள் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை முழுமையாகத் தடை செய்துள்ளன.
பொது இடங்களில் புகை பிடிக்கவும், புகையிலைப் பொருள்களுக்கு விளம்பரம் செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையால், புகையிலைப் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது.
உடல் நலனுக்குத் தீங்கு விளைவிப்பதால், புகையிலையை ஒழிக்க முற்படும் அதே வேளையில், புகையிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களுக்கு உகந்த மாற்றுத் தொழிலை வழங்கவேண்டும் என்றார் பிரதமர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, ""2009-10 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் நான்கில் ஒருவர், அதாவது 27.5 கோடி பேர் ஏதாவது ஒரு வகையில் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். வாய்ப் புற்று நோயால் இறப்பவர்களும் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்'' என்று தெரிவித்தார்.