முகப்பு
இந்தியா

பதவி விலக வலியுறுத்தி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக தொண்டர்கள் கைது

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 13 மே 2013, 1:42 am IST
பகிர்:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் இல்லம் உள்ள ரேஸ் கோர்ஸ் சாலைக்குள் தடையை மீறி செல்ல முயன்ற அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

ரயில்வே வாரிய உறுப்பினர் பணி நியமனத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானதால் ரயில்வே அமைச்சர் பதவியை பவன் குமார் பன்சாலும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தயாரித்த அறிக்கையைத் திருத்திய புகாரில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரும் பதவியை ராஜிநாமா செய்தனர்.

Advertisement

Advertisement

அதையடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பாஜக கூறியது. அதை வலியுறுத்தி, கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அனுராக் தாகுர் தலைமையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ரேஸ் கோர்ஸ்-துக்ளக் சாலை சந்திப்பில் திரண்டனர்.

"நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்' என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அப்போது, தடுப்புகள் மீது ஏறி ரேஸ் கோர்ஸ் சாலைக்குள் நுழைய அவர்கள் முற்பட்டனர்.

அதையடுத்து, "வஜ்ரா' வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் அவர்களைக் கலைக்க போலீஸார் முயற்சித்தனர்.

அதையும் மீறி, போராட்டக் குழுவில் இருந்த சிலர், மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை அந்தப் பகுதியிலேயே கொளுத்தினர்.

அதையடுத்து, அகில இந்திய பாஜக இளைஞர் அணித் தலைவர் அனுராக் தாகுர், பொதுச் செயலாளர் நிதின் நவீன், செயலாளர் தோனி சர்மா, தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல், தில்லி பாஜக இளைஞர் அணித் தலைவர் நகுல் பரத்வாஜ் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். பிற்பகலில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மெட்ரோ ரயில் நிலையம் மூடல்

பாஜகவினரின் போராட்டத்தையொட்டி, பிரதமர் இல்லம் உள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியை இணைக்கும் அனைத்துச் சாலை சந்திப்புகளிலும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு போலீஸார் தடை விதித்தனர். பிரதமர் இல்லம் உள்ள பகுதியில், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஸ் கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ரேஸ் கோர்ஸ் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில்கள் நிற்காமல் சென்றன.

ரேஸ் கோர்ஸ் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.