இந்தியா

குஜராத்தில் மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்: எனது வெற்றி உறுதி

DIN

மாநிலங்களவைத் தேர்தலில் தனது வெற்றி உறுதி என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 3 பேரும், காங்கிரஸ் சார்பில் அகமது படேலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தனர். மேலும் சிலரும் பாஜகவில் இணையலாம் என்று தகவல் வெளியானது. இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 44 பேரை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு காங்கிரஸ் மேலிடம் கொண்டு சென்று தங்க வைத்தது.
பின்னர் அவர்கள் பெங்களூரில் இருந்து குஜராத்துக்கு அழைத்து வரப்பட்டு, ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 44 பேரையும், அகமது படேல் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தத் தேர்தல், குறிப்பிட்ட யாருடைய கௌரவம் சம்பந்தப்பட்டது கிடையாது. எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேருடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஒருவரின் ஆதரவும் எனக்கு உள்ளது.
இவர்களைத் தவிர்த்து, இதுவரை தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கும் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் எனக்கு ஆதரவாக வாக்களிப்பர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலாவும் எனக்கு வாக்களிப்பேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதியாகும்.
அதேநேரத்தில், இந்தத் தேர்தலில் பாஜக தரப்பில் ஏன் 3ஆவது வேட்பாளர் நிறுத்தப்பட்டார் என்பது தெரியவில்லை. அக்கட்சியின் 3ஆவது வேட்பாளரின் வெற்றிக்கு பாஜகவிடம் போதிய எம்எல்ஏக்கள் இல்லை. வெற்றிக்கு தேவையான மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் 16 எம்எல்ஏக்கள் குறைவாக உள்ளனர். அப்படியிருக்கும்போது பாஜக ஏன், இதை செய்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கட்சித் தாவலில் ஈடுபடும்படி காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அவர்களது குடும்பத்தினர் அச்சுறுத்தப்படுகின்றனர்; துன்புறுத்தப்படுகின்றனர். ஆதலால்தான், எங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளோம் என்றார் அகமது படேல். மாநிலங்களவைக்கு அகமது படேல் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில், அவருக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT