இந்தியா

நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறை: உச்ச நீதிமன்றத்துக்கு ரவிசங்கர் பிரசாத் பாராட்டு

DIN

கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்காக தேசிய அளவில் ஒருங்கிணைந்த நடைமுறையைக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதற்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் உயர் நீதிமன்றங்களின் உரிமைகள் பறிபோகாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கீழமை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லாததால் லட்சக்கணக்கான வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளதாக தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தற்போதைய நடைமுறைப்படி, தேர்வுகள் மூலம் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் அந்த நியமன நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், அதனை சீராக்கும் விதமாக தேசிய அளவில் அவற்றை ஒருங்கிணைக்கும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நடைமுறையில் தேசிய அளவில் ஓர் அதிகார அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தேர்வுகள் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இந்த புதிய நடைமுறைக்கு பல்வேறு மாநிலங்களும், உயர் நீதிமன்றங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பார் கவுன்சில் தலைவர் சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
பல்வேறு உயர் நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதிகள் பொறுப்புக்கு நிகழாண்டில் இதுவரை 77 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கீழமை நீதிமன்றங்களை எடுத்துக் கொண்டால், அங்கும் புதிதாக பல நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
அதற்கான நியமன நடைமுறையில் திருத்தம் கொண்டுவருவதற்கு சில உயர் நீதிமன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தங்களது உரிமைகள் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் அந்த உயர் நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. அந்த ஐயத்தை எங்களால் முழுமையாக உணர முடிகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, உயர் நீதிமன்றங்களின் உரிமைகளை எவராலும் பறிக்க இயலாது. எனவே, இந்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் உயர் நீதிமன்றங்கள், தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT