இந்தியா

பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7%-ஆகக் குறையும்: ஏடிபி வங்கி

DIN

நிகழ் நிதியாணடில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தபடி அல்லாமல் 6.7 சதவீதமாகக் குறையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.0 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அந்த கணிப்புகள் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட இயலாததற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகியவற்றின் தாக்கமே காரணம் என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏடிபி வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளானது நாட்டின் நிதிச் சூழலில் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் சரி; கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியும் சரி, பொருளாதாரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
அது, மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்திலும் எதிரொலித்திருக்கிறது. மேலும், அதன் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் நிதி நிலையில் எதிர் விளைவுகளை உருவாக்கின. இதற்கு நடுவே, பருவ நிலை மாற்றங்களால் வேளாண் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்த காரணங்களாலேயே திட்டமிட்ட பொருளதார வளர்ச்சியை எட்ட முடியாத சூழல் இந்தியாவுக்கு உருவானது.
இத்தகைய சவால்கள் இருப்பினும், நாட்டின் பணவீக்கம் இதுவரை கட்டுக்குள்தான் உள்ளது. கடந்த 7 மாதங்களாக அதன் சராசரி விகிதம் 2.7 சதவீதமாகவே இருப்பது சிறப்பு. பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், நிகழ் நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே அடுத்த நிதியாண்டில் அது 7.3 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. அந்த காலகட்டத்தில் பணவீக்க விகிதம் குறையக்கூடும்.
அடுத்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அது இந்தியப் பொருளாதாரத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தலாம். அதேவேளையில், தனியார் நிறுவன முதலீடுகள் அதிகரிக்கும்பட்சத்தில் சீரான நிதிச் சூழல் நிலவும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உலக வங்கியும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவு இருக்காது எனக்கூறி தனது கணிப்பு விகிதத்தை திருத்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT