இந்தியா

ஹிமாச்சல்: வீரபத்ர சிங் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஆளுநரிடம் பாஜக நேரில் வலியுறுத்தல்

DIN

ஹிமாச்சலப் பிரதேசத்தை ஆளும் வீரபத்ர சிங் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரதிடம் பாஜக திங்கள்கிழமை நேரில் வலியுறுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான பி.கே. துமால் தலைமையில் பாஜக நிர்வாகிகள், சிம்லாவில் ஆளுநர் ஆச்சார்ய தேவவிரதை திங்கள்கிழமை சந்தித்தனர். அப்போது அவரிடம், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் சீர்கெட்டு விட்டதாகவும், இதனால், மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, பி.கே. துமால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, அப்பாவி மக்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதனால், போலீஸார் மீதும், மாநில அரசு மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. அரசு அமைப்பு மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமெனில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேலும், ஹிமாச்சலப் பிரதேச சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு, உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.
கோத்தாயில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், போலீஸார் சரிவர பணியாற்றவில்லை. இதேபோல், மாண்டியில் வன அலுவலர் ஹோசியார் சிங் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம், குல்லுவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் போன்றவற்றிலும் போலீஸார் சரிவர செயல்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் செயல்படும் திறன் அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்றார் பி.கே. துமால்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. வீரபத்ர சிங், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ.யால் சொத்துகுவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

கற்பித்தலும் கற்றலும்

ஈரான் அதிபர் மறைவு: நாளை துக்கநாள் அனுசரிப்பு

உதகை மலர் கண்காட்சி: மே 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT