இந்தியா

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை விலை உயர்த்தப்படமாட்டாது: ராம்விலாஸ் பாஸ்வான்

DIN

நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை இன்னும் ஓராண்டுக்கு உயர்த்தப்படமாட்டாது என்று மத்திய நுகர்வோர் நலத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உறுதியளித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. அவற்றின் வாயிலாக பல்வேறு உணவுப் பொருள்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.1.4 லட்சம் கோடியை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இதைத் தவிர மாநில அரசுகளும் குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்குவதால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் விலையில்லா அரிசித் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனிடையே, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை கடந்த 2003-ஆம் ஆண்டு அமல்படுத்தியது.
அந்தச் சட்டத்தில் நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களின் விலையை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டிலேயே அந்த விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் ஓராண்டு காலத்துக்கு பழைய விலையிலேயே உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக ராம்விலாஸ் பாஸ்வான் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இடஒதுக்கீடு அடிப்படையில் புதிய கடைகள்: மாநிலங்களில் புதிதாக நியாய விலைக் கடைகளைத் திறப்பதும், பணியாளர்களை நியமிப்பதும் இடஒதுக்கீட்டு கொள்கையில் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பலனளிக்கும் வகையில் புதிதாக கடைகளை அமைக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்களின் விலையை இன்னும் ஓராண்டுக்கு உயர்த்தக் கூடாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். விளிம்பு நிலை மக்களின் நலனை காப்பதற்காக மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதையே இத்தகைய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என்று அந்தப் பதிவுகளில் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT