இந்தியா

இந்தியாவுக்கு நாளை வருகிறார் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே

DIN

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, இந்தியாவுக்கு புதன்கிழமை (செப்.13) வருகை தரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இந்தியாவின் முதலாவது புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்தியாவில் வரும் புதன்கிழமை முதல் 2 நாள்களுக்கு ஜப்பான் பிரதமர் அபே சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அதன்படி, குஜராத் மாநிலம், ஆமதாபாதுக்கு புதன்கிழமை பிற்பகலில் அவர் வருகை தரவுள்ளார். இதையடுத்து, பிரதமர் மோடியுடன் சேர்ந்து, ஷின்ஸோஅபே சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து விடுதிக்கு இருவரும் செல்கின்றனர். அங்கு அபே-க்கு, மோடி சிறப்பு விருந்து அளித்து கௌரவிக்கவுள்ளார். அதையடுத்து, இருவரும் தனியே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஆசிய-ஆப்பிரிக்க பொருளாதார முனையத் திட்டத்தை ஜப்பானுடன் சேர்ந்து செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டம் தொடர்பாகவும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிகிறது.
அதன்பின்னர், பிரதமர் மோடியும், ஷின்ஸோ அபேயும் வியாழக்கிழமையன்று ஆமதாபாதில் உள்ள சபர்மதி ரயில் நிலையத்துக்கு செல்லவுள்ளனர். அங்கு அவர்கள், மும்பை-ஆமதாபாத் இடையே ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளனர். இதேபோல், ஆமதாபாத் அருகே ஹன்சல்பூரில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சுஸூகி நிறுவனத்தின் கார் தயாரிப்பு ஆலை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடியும், ஷின்ஸோ அபேயும் கூட்டாகத் தொடங்கி வைக்கவுள்ளனர்.
அதன்பின்னர், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திருக்கு தலைவர்கள் இருவரும் செல்கின்றனர். அங்கு இருநாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அப்போது, இருநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களும் தனியே சந்தித்துப் பேசவுள்ளனர்.
பிரதமர் மோடி, ஷின்ஸோ அபே இடையேயான பேச்சுவார்த்தையின்போது 2 நாடுகளுக்கும் இடையே 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன.
சீன அதிபர் ஜீ ஜின்பிங், இந்திய சுற்றுப்பயணத்தை குஜராத் மாநிலத்தில் தொடங்கினார். அதன்பிறகு, குஜராத்துக்கு நேரடியாக வரும் 2-ஆவது வெளிநாட்டுத் தலைவர் ஷின்ஸோ அபே ஆவார். அந்த முறையில் அவரது இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.
ஜப்பான் பிரதமர் அபேயின்சுற்றுப்பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் இடையேயான 12-ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோடியுடன், அபே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்; இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தலைவர்கள் இருவரும் ஆய்வு செய்யவுள்ளனர். மேலும், இரு நாடுகளின் எதிர்கால இலக்கை தலைவர்கள் இருவரும் இறுதி செய்வர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனை, ஏவுகணைச் சோதனைகளால் பெரும் பதற்றம் நிலவுகிறது. வடகொரியாவின் நடவடிக்கையால் ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், தென்சீனக் கடலில் சீனாவின் தொடர் அத்துமீறலாலும் ஜப்பானுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில், இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சிமாநாடு நடைபெறுவதும், அதில் பிரதமர் மோடியும், அபேயும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT