இந்தியா

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்: உச்சநீதிமன்றம்

DIN


புதுதில்லி: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
லஞ்ச வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கண்காணிக்கப்படும் நபர் என்று நோட்டீஸ் அனுப்பியதற்கு உரிய காரணம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களைத் தொடங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து முதலீடு திரட்டுவதற்கு கடந்த 2007இல் மத்திய அரசின் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் கடந்த 2007-ல் அனுமதி கோரியது. மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, இந்த நிறுவனத்துக்கு மேற்கண்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எனினும், நிபந்தனைகளை மீறி ஐஎன்எக்ஸ் நிறுவனம் நிதி திரட்டியதாகவும், அதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடந்தையாக இருந்ததாகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கண்காணிக்கப்படும் குற்றவாளி என்று அறிவிக்கும் நோட்டீஸை சிபிஐ அண்மையில் வெளியிட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர் மீதான அந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

அதைத் தொடர்ந்து, தம்மை கண்காணிக்கப்படும் குற்றவாளி என்று அறிவிக்கும் நோட்டீஸுக்குத் தடை விதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான வாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்களை சிபிஐ தரப்பு சீலிட்ட உறையில் வைத்து நீதிபதியிடம் சமர்ப்பித்தது.

அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் கூறுகையில், 'இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உரிய விஷயம் என்பது நானல்ல. அது நிதியமைச்சராக இருந்தபோது கடந்த 2007-இல் ஒரு நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை அளித்த எனது தந்தை ப.சிதம்பரம்தான். அந்த விவகாரத்தில் விதிகளும், நிபந்தனைகளும் மீறப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் 6 உறுப்பினர்களில் ஒருவர் கூட விசாரிக்கப்படவில்லை' என்று வாதிட்டார்.

அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கண்காணிக்கப்படும் நபர் என்ற சுற்றறிக்கையை (நோட்டீஸ்) வெளியிடுவதற்கு உரிய காரணம் உள்ளது. இது தனியொரு சம்பவம் அல்லது ஒரு நிறுவனம் தொடர்புடைய வழக்கு அல்ல. மாறாக, வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் மற்றும் கணக்கு-வழக்குகளில் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பானதாகும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை இன்று திங்கள்கிழமைக்கு (செப்.11) ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

இதையடுத்து இன்று மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வழக்கு முடியும் தருணத்தில் உள்ளதால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் தடை தொடர அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் வழக்கின் இறுதி விசாரணை வரும் திங்கள்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றுடன் கண்காணிக்கப்படும் குற்றவாளி என்று அறிவித்த நோட்டீஸுக்குத் தடை முடிவடையும் நிலையில், மீண்டும் தடை தொடரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT