முகப்பு
இந்தியா

மான் வேட்டை: சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை!

சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 4:23 am IST
தீர்ப்பையொட்டி ஜோத்பூர் நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்த நடிகர் சல்மான் கான்.
பகிர்:

சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சாட்சியங்களும், ஆதாரங்களும் சல்மானுக்கு எதிராக இருந்ததையடுத்து இத்தகைய தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த திரை நட்சத்திரங்கள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, சையஃப் அலி கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் தற்போது இத்தகைய தீர்ப்பு வெளியாகியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் 'ஹம் சாத் சாத் ஹைன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் சல்மான், தபு, நீலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டன. அன்றைய தினம் இரவில், வனப்பகுதிக்கு அருகே ஜிப்சி வாகனத்தில் சல்மான் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அரிய வகை மான்கள் அங்கு உலவிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மான்களை சல்மான் கான் வேட்டையாடினார். உடன் சென்ற நட்சத்திரங்களும் அதற்கு உதவியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 9/61-இன் கீழ் சல்மான், சையஃப் அலி கான், தபு, நீலம், சோனாலி, துஷ்யந்த் சிங் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. அந்த சட்டப் பிரிவின்படி குற்றம் நிரூபணமானால் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பலதரப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தச் சூழலில், கடந்த மாதம் 28-ஆம் தேதி வழக்கின் மீதான இறுதி வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. அதைக் கேட்டறிந்த நீதிபதி தேவ் குமார் கத்ரி, ஏப்ரல் 5-ம் ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் விவரங்களை அறிவதற்காக சல்மான் கான் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். குற்றம்சாட்டப்பட்ட பிற நட்சத்திரங்களும் ஆஜராகியிருந்தனர். வழக்கின் வாத, பிரதிவாதங்களும், சாட்சியங்களும் சல்மான் கான் மான் வேட்டையில் ஈடுபட்டதை உறுதி செய்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார். வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான் கான் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தபு உள்ளிட்ட 5 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதி விளக்கமளித்தார்.
மேல்முறையீடு செய்ய முடிவு
ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்போவதாக சல்மான் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது வழக்குரைஞர் ஆனந்த் தேசாய் கூறியதாவது:
நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும், தீர்ப்புக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதேவேளையில், சல்மான் கானுக்கு எதிரான வழக்கில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
சிங்காரா எனப்படும் அரிய வகை மானை வேட்டையாடியதாக சல்மான் கானுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், அவரை கடந்த 2016-ஆம் ஆண்டு விடுவித்தது. இந்த வழக்கிலும், அதே விசாரணை நடைமுறைகள், சாட்சியங்கள், ஆதாரங்கள்தான் உள்ளன. ஆனால், தீர்ப்பு வேறு விதமாக அமைந்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments