திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு அன்புமணி தெரிவித்துள்ள இரங்கல் குறித்து...
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், தமிழ்த் திரையுலகின் தளகர்த்தர்களில் ஒருவரும், சிறந்த திரைக்கதையாசிரியர் என போற்றப்பட்டவருமான இயக்குநர் கே.பாக்யராஜ் சனிக்கிழமை(ஜூன் 27) காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமான அதிர்ச்சியிலிருந்து தமிழ்த் திரையுலகம் இன்னும் மீளாத நிலையில், அவரது மாணவரும், தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞராக திகழ்ந்தவருமான பாக்யராஜும் மறைந்திருப்பது சோகத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. பாரதிராஜாவின் பள்ளியில் உருவான பாக்யராஜ், தமக்கென்று தனிப் பள்ளியை உருவாக்கி ஏராளமான புதிய இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகளை அறிமுகம் செய்தார். திரையுலகில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பல கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தது அவரின் மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
Advertisement
Advertisement
திரையிலகில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை என திரைத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் வல்லமை பெற்று பன்முகக் கலைஞராக திகழ்ந்தவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
திரையுலகில் எவரும் பேசத் துணியாத பல உண்மைகளை எவர் மனமும் புண்படாதவாறு நகைச்சுவையுடன் திரைமொழியாக பேசியவர். திரைப்படங்களின் வாயிலாக சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் கூறியவர். 45 ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய திரைப்படங்களை இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படியாகவும், இன்றைய காலத்திற்கு பொருந்தும் வகையிலும் இருக்கும் என்பது தான் காலத்தைக் கடந்த இயக்குநர் அவர் என்பதற்கு சான்று ஆகும். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய முதல்வர்களின் அன்பைப் பெற்றிருந்த கே.பாக்யராஜ், எம்.ஜி.ஆரால் அவரது கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர்.
திரையிலகிற்கு வெளியில் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் கால் பதித்த பாக்யராஜ், பின்னர் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிலும் சில காலம் பயணித்திருக்கிறார். பாக்யா என்ற பல்சுவை வார இதழையும் தொடங்கி பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர். அரசியல் தவிர தாம் கால்பதித்த அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்ற பெருமையும், சிறப்பும் அவருக்கு உண்டு.
இயக்குநர் கே.பாக்யராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Death of film director and actor Bhagyaraj: Anbumani offers condolences
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.