நிலுவை மானியம், 6 காட்சிகளுக்கு அனுமதி: தமிழக அரசுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம் பற்றி...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், முன்னாள் செயலாளர்கள் ஏ.எல். அழகப்பன், டி. சிவா, முன்னாள் பொருளாளர்கள் கஹஜாமைதீன், சந்திரபிரகாஷ் ஜெயின், வி.சி. குகநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், கமிலா நாசர், சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி, தயாரிப்பாளர்களின் நலன், திரைத்துறையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளும் ஆலோசனைகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மானியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்ததற்கும், பண்டிகைக் காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஒரு வாரத்திற்கு ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதற்கும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த முக்கியமான நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இக்கூட்டம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.