முகப்பு
இந்தியா

ஆதார் மூலம் தனிநபர் நிதிநிலை தகவல்களை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது

ஆதார் மூலம் தனிநபரின் நிதிநிலை தொடர்பான தகவல்களை சேகரித்து, அவற்றை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:17 am IST
பகிர்:

ஆதார் மூலம் தனிநபரின் நிதிநிலை தொடர்பான தகவல்களை சேகரித்து, அவற்றை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆதார் அட்டை வழங்கும் திட்டம் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனிநபர் உரிமைகளுக்கு எதிரானதா? என்பது குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஆதாருக்காக ஒருவர் விரல் ரேகையை பதிவு செய்வதால் அதில் இருந்து அவர் தொடர்பாக எந்தத் தகவலையும் எடுக்க முடியாது என்று கூறுகிறீர்கள். ஆனால், ஒருவர் பிறந்ததில் இருந்து அனைத்து இடத்திலும் ஆதாரைப் பயன்படுத்தினால், உதாரணமாக தொடக்கப் பள்ளியில் சேர்வது, சிபிஎஸ்இ தேர்வு எழுதுவது, வேலையில் சேர்வது, வெளிநாட்டுக்குச் செல்வது என அனைத்து இடத்திலும் ஆதாரைப் பயன்படுத்தும்போது, அவரது நிதிநிலை தொடர்பான தகவல்களை எளிதாக சேகரித்துவிட முடியும். அதனை தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) மற்றும் குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி கூறியதாவது:
பெரும்பாலான இடங்களில் ஆதார் ஒருமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக பான் கார்டு, செல்லிடப்பேசி எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை ஒருவர் வாழ்க்கையில் ஒருமுறைதான் பெறுகிறார். அன்றாட நடைமுறைகளில் காலையும், மாலையும் ஆதார் பயன்படுத்துவது இல்லை. மேலும், ஆதார் இல்லாதவர்கள் வேறு அரசு ஆவணங்களை அடயாள ஆவணமாகப் பயன்படுத்த சட்டத்தில் இடம் உள்ளது. ஆதார் இல்லாதவர்களுக்கு எந்த சேவையும் மறுக்கப்படுவது இல்லை.
மேலும், ரேஷன் பொருள்களை பெற ஆதார் மூலம் உறுதி செய்வதற்கு ஒருநபரின் அடையாளம் அங்கீகரிக்கப்படவில்லை என்றால் குடும்பத்தின் மற்றொரு நபரின் ஆதாரைப் பயன்படுத்த முடியும் என்றார்.
ஆதாருக்கு எதிராக மனுதாரர்களில் முக்கியமானவரான உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் வாதிடுகையில், 'வங்கிகள் இப்போது ஆதார் எண் இல்லாமல் நிரந்தர வைப்புக் கணக்குகளை தொடங்க அனுமதிப்பது இல்லை. என்னிடம் ஆதார் இல்லை. நான் யுகோ வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்கு தொடங்கச் சென்றேன். அங்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் சுட்டிக்காட்டி ஆதார் இல்லாமல் வேறு ஆவணங்கள் மூலம் கணக்குத் தொடங்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், அவர்கள் ஆதார் இல்லாமல் கணக்குத் தொடங்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதுதான் நாட்டில் நிலவும் உண்மை நிலை' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.