குஜராத் கலவர வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு
குஜராத்தில் கடந்த 2002-இல் ஒடே என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிறுபான்மையினர் 23 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான
குஜராத்தில் கடந்த 2002-இல் ஒடே என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிறுபான்மையினர் 23 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான உத்தரவை அந்த மாநில உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2002-இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்கள் நிகழ்ந்தன. அப்போது, ஆனந்த் மாவட்டத்திலுள்ள ஒடே என்ற இடத்தில் குழந்தைகள், பெண்கள் என 23 பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில் கடந்த 2012-இல் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது. மேலும் 23 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் மாநில அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், 'ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட18 பேருக்கும் தூக்கு தண்டனையும், 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்' என்று கோரப்பட்டது.
இதேபோல், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை அண்மையில் நிறைவடைந்தது.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தங்களது உத்தரவை நீதிபதிகள் அகில் குரேஷி, பி.என்.காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒத்திவைத்துள்ளது. இத்தகவலை, குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர் யோகேஷ் லக்கானி புதன்கிழமை தெரிவித்தார்.