முகப்பு
இந்தியா

உ.பி. தலைமைச் செயலகத்தில் வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு உத்தரப் பிரதேச தலைமைச் செயலகத்தில், 25 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்

Updated On : 26 டிசம்பர் 2018, 1:06 am IST
பகிர்:


முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு உத்தரப் பிரதேச தலைமைச் செயலகத்தில், 25 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 94ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
வாஜ்பாய்க்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் தனது பொது வாழ்க்கையை பல்ராம்பூரிலிருந்து தொடங்கினார். லக்னெள தொகுதியின் எம்.பி.யாக 5 முறை அவர் இருந்துள்ளார். அவரது பெயரால் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சியை வழங்கியதன் முன்னோடியாக வாஜ்பாய் திகழ்கிறார். தீன்தயாள் உபாத்யாயவிடமிருந்தும், ஷியாமா பிரசாத் முகர்ஜியிடமிருந்தும் அரசியல் நுணுக்கங்களை அவர் கற்றுக்கொண்டார். அரசியலில் அவர் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறார். 
மக்களாட்சியைக் காப்பதற்கு ஒரு ராணுவ வீரரைப் போல் அவர் செயல்பட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அவர் திகழ்கிறார் என்று அவர் தெரிவித்தார்.
சிறந்த தலைவர்: விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், கோவத்தில் இருக்கும்போதும், வாஜ்பாய் கனிவுடன் நடந்துகொள்வார். கட்சிகளுக்கு இடையே இருந்த வேறுபாடுகள் அவரது ஆட்சிக் காலத்தில் மறைந்து போயின. பொது வாழ்க்கையில் ஈடுபடுவது குறித்து அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக் கூறுகையில், இயேசு கிறிஸ்து, மதன்மோகன் மாளவியா ஆகியோர் பிறந்த அதே நாளில் வாஜ்பாயும் பிறந்தது சிறப்பானதாகும். அரசியலில் சிறந்த தலைவராக அவர் விளங்கினார். எதிர்க்கட்சியினரும் கூட அவரைப் பற்றி உயர்வாகவே பேசி வந்தனர் என்றார்.
வாஜ்பாய் பெயரில் பள்ளிகள்: வாஜ்பாய் பிறந்த தினத்தையொட்டி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நாடு வளர்ச்சியடைய வாஜ்பாய் கடுமையாக உழைத்தார். கிராமப்புறப் பள்ளிகளிலும் சர்வதேச தரத்திலான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். புதுமையான நடைமுறைகள் மூலம் மகாராஷ்டிர அரசு கல்வித்துறையில் முன்னேறி வருகிறது. ஆங்கில வழிக்கல்வி பயின்று வந்த பல மாணவர்கள் தற்போது மாநில அரசு நடத்தி வரும் பள்ளிகளில் சேரத் தொடங்கியுள்ளனர். 
சர்வதேச தரத்திலான கல்வி வழங்க சர்வதேசப் பள்ளிகளை அரசு தொடங்க உள்ளது. இந்தப் பள்ளிகளுக்கு பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் சர்வதேசப் பள்ளிகள் எனப் பெயரிடப்பட உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments