சுட்டுத் தள்ளுங்கள்! பிரச்னை வராது...!: கர்நாடக முதல்வர் குமாரசாமி பேச்சால் சர்ச்சை
ஈவு இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளுங்கள்; பிரச்னை வராது என்று காவல் துறையினருக்கு கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி போலீஸாருக்கு செல்லிடப்பேசியில் உத்தரவிடும் விடியோ
ஈவு இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளுங்கள்; பிரச்னை வராது என்று காவல் துறையினருக்கு கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி போலீஸாருக்கு செல்லிடப்பேசியில் உத்தரவிடும் விடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கட்சிப் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து அவர் இவ்வாறு பேசியுள்ளார். இதனை முன்வைத்து மாநில எதிர்க்கட்சியான பாஜக, முதல்வரைக் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த குமாரசாமி, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவ்வாறு பேசியதாகவும், உண்மையிலேயே சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிப் பிரமுகர் பிரகாஷ் (50). இவர், திங்கள்கிழமை மாலை மைசூரு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, 4 பேர் அடங்கிய கும்பல் காரை வழிமறித்து பிரகாஷை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தது. இந்தச் சம்பவத்தால் மாண்டியா மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சிப் பிரமுகர் கொலை செய்யப்பட்டது குறித்த தகவலை கட்சியின் தலைவரும், முதல்வருமான குமாரசாமியிடம் மதச்சார்பற்ற ஜனதா தளம் தொண்டர்கள் தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக போலீஸாரிடம் குமாரசாமி பேசினார். அப்போது, இந்தக் கொலை வழக்கை எப்படி கையாளப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்தக் கொலைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இதனால் நான் மிகவும் வெறுப்படைந்துள்ளேன். எனக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவர் (கொல்லப்பட்ட பிரகாஷ்) நல்ல மனிதர். அவரை ஏன் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. அவரைக் கொலை செய்தவர்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளுங்கள்; பிரச்னைகள் வராது. நான் அதனை எதிர்கொள்கிறேன் என்று கூறினார். அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது செல்லிடப்பேசியில் இவ்வாறு பேசியது, அங்கிருந்த ஊடகத்தினரால் விடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த விடியோ சமூக வலைதங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, எதிர்க்கட்சியான பாஜகவின் மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறுகையில், ஒரு முதல்வர் இவ்வாறு பேசியதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை என்னவாகும்? மிகவும் பொறுப்பற்ற வகையில் முட்டாள்தனமாக அவர் பேசியுள்ளார் என்றார்.
பின்னர் தனது பேச்சு குறித்து விளக்கமளித்த குமாரசாமி, மாண்டியா பகுதியில் இதற்கு முன்பே எங்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் இதேபோல் கொலை செய்யப்பட்டனர். எனவே, மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தேன். ஏற்கெனவே, கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இந்தக் கொலையைச் செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பிரகாஷ் எனக்கு நன்கு அறிமுகமானவர். எனவே, அவர் கொலை செய்யப்பட்டதால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினேன். குற்றவாளிகளை சுட்டுக்கொலை செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பேசவில்லை என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.