ஜம்முவில் தொடரும் கடுங்குளிர்: நீர்நிலைகள் உறைந்தன: குடிநீர் வழங்குவதில் சிக்கல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கடுங்குளிர் காற்று வீசி வருவதால், அங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் உறைந்துவிட்டன. இதனால், அங்கு மக்களுக்குக் குடிநீர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கடுங்குளிர் காற்று வீசி வருவதால், அங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் உறைந்துவிட்டன. இதனால், அங்கு மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடுங்குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுங்குளிர் நிலவி வருகிறது. அங்கு, திங்கள்கிழமை மைனஸ் 6.8 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெப்பநிலை பதிவானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மைனஸ் 5.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
இது குறித்து, வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறுகையில், தெற்கு காஷ்மீரின் குவாஸிகண்ட் பகுதியில் மைனஸ் 5.2 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், பஹல்காம் பகுதியில் மைனஸ் 7.7 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் மைனஸ் 5.2 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குல்மார்க் பகுதியில் மைனஸ் 7.6 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது.
மேலும், லே பகுதியில் மைனஸ் 10 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. அங்கு திங்கள்கிழமை மைனஸ் 14.7 டிகிரி செல்ஷியல் வெப்பநிலை பதிவாகி இருந்தது. கார்கில் பகுதியில் மைனஸ் 14.2 டிகிரி செல்ஷியஸாக வெப்பநிலை பதிவானது என்றனர்.மாநிலத்தில் தற்போது கடுங்குளிர் காலம் நிலவி வருகிறது. இது ஜனவரி 31 வரை நீடிக்கும். அடுத்த 20 நாள்களுக்கு சிறுகுளிர் காலம் நிலவும். பின்னர், அடுத்த 10 நாள்களுக்கு குறுகுளிர் காலம் நிலவும். வழக்கமாக, நவம்பர் மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவும். ஆனால், தற்போது வறண்ட குளிர்நிலை நிலவுவதால், மக்களுக்கு இருமல், சளி, சுவாசப் பிரச்னைகள் ஆகியவை ஏற்பட்டு வருகின்றன.
கடுங்குளிரால் பெரும்பாலான நீர்நிலைகள் உறைந்துவிட்ட நிலையில், அங்கு மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணாவில் பனிமூட்டம்: பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில், வெப்பநிலை மேலும் குறைந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து, வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:
அமிருதசரஸ், ஆதம்பூர் ஆகிய பகுதிகளில் 0.4 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், பஞ்சாப், பதான்கோட் ஆகிய பகுதிகளில் 2.9 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், லூதியானாவில் 2.8 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது. மேலும், பரித்கோட்டில் 3.8 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குர்தாஸ்பூரில் 3.5 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், பதின்டாவில் 4.5 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது.
யூனியன் பிரதேசமான சண்டீகரில் 5.5 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், ஹிசார் பகுதியில் 2.8 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், ரோதக் பகுதியில் 4.2 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால், அருகிலுள்ள கட்டடங்களும், வாகனங்களும் கண்களுக்குப் புலப்படாத நிலை ஏற்பட்டது. அங்கு நிலவும் கடுங்குளிர் அடுத்த சில நாள்களுக்குத் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.