இந்தியா

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு தண்டனை இன்று தெரியும்

DIN

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2ஆவது வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேருக்கான தண்டனை விவரங்களை வெளியிடுவதை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு (ஜன.4) ஒத்திவைத்துள்ளது.
ஒன்றுபட்ட பிகார் மாநில முதல்வராக லாலு பதவி வகித்தபோது கடந்த 1996-ஆம் ஆண்டில், கால்நடைத் தீவனத் திட்டத்தில் சுமார் ரூ.950 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 6 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றில், சாய்பாஸா கருவூலத்தில் போலி கையெழுத்திட்டு ரூ.37.7 கோடியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் லாலு பிரசாத், முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எம்.பி. பதவியை லாலு பிரசாத் இழந்ததுடன், தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்தார். எனினும், உச்ச நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.
இந்நிலையில், தேவ்கர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் முறைகேடு செய்தது தொடர்பான 2ஆவது வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி தீர்ப்பளித்தார். அப்போது அவர், லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா (ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்) உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார்.
அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா, பொதுக் கணக்குக் குழுவின் முன்னாள் தலைவர் துருவ் பகத் உள்ளிட்ட 6 பேரை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார். அப்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் 16 பேருக்கான தண்டனை விவரங்கள், ஜனவரி மாதம் 3-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதன்கிழமை தண்டனை விவரம் வெளியிடப்படவில்லை: இந்நிலையில், ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை விவரம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டதால், லாலு பிரசாத் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அதேநேரத்தில், ராஞ்சி நீதிமன்றத்தைச் சேர்ந்த 2 வழக்குரைஞர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புதன்கிழமை கூட்டம் நடத்தப்பட்டது. இதனால், இந்த வழக்கு புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிபிஐ வழக்குரைஞர் கூறுகையில், 'வழக்கில் தண்டனை விவரம் வியாழக்கிழமை வெளியிடப்பட வாய்ப்புள்ளது' என்றார்.
லாலு மகனுக்கு நோட்டீஸ்: இதனிடையே, ராஞ்சி சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஆர்ஜேடி தலைவர்கள் ரகுவன்ஸ் பிரசாத் சிங், சிவானந்த் திவாரி, காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி ஆகியோர் விமர்சித்ததாகத் தெரிகிறது. 
இதுகுறித்து நீதிபதி சிவ்பால் சிங் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, வரும் 23ஆம் தேதியன்று தேஜஸ்வி பிரசாத் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகக்கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT