இந்தியா

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: பிரதமர் உறுதி

DIN

"நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கமாக்க வேண்டும் என்ற இலக்கு நமக்கு முன்னே உள்ளது. இந்த இலக்கை எட்ட பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
நீதி ஆயோக் நிர்வாகக் குழுவின் 4-ஆவது கூட்டம் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 23 மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இக்குழுவின் கூட்டத்தில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முக்கிய நடவடிக்கைகள்: இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
2017-18-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதம் என்ற சிறப்பான நிலையில் உள்ளது. இந்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கமாக்குவதுதான் நமக்கு முன்பு இப்போதுள்ள சவால் ஆகும். இதையே நாம் இலக்காகவும் கொண்டுள்ளோம். இந்த இலக்கை எட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உங்கள் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
மாநில முதல்வர்களின் பங்கு: தலை சிறந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். பல்வேறு கொள்கைகளை வகுப்பதிலும், அதனை அமல்படுத்துவதிலும் மாநில முதல்வர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 1.5 லட்சம் சுகாதார மையங்களை அமைத்துள்ளோம். 10 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீட்டை வழங்கியுள்ளோம். கல்வித் துறையை மேம்படுத்துவதிலும் நாம் அனைவரும் இணைந்து செயல்படுகிறோம்.
இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை: முத்ரா திட்டம், ஜன் தன் திட்டம், "ஸ்டார்ட் அப்' இந்தியா திட்டம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. நாட்டில் பொருளாதாரச் சமநிலையை ஏற்படுத்துவதிலும் பங்களிக்கின்றன. இந்தியாவில் இயற்கை வளங்களுக்கோ, மனித ஆற்றலுக்கோ எந்தத் தட்டுப்பாடும் இல்லை.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு நிதியைப் பெற இருக்கின்றன. இது, கடந்த ஆட்சியின் இறுதி ஆண்டில் மாநில அரசுகள் பெற்ற தொகையைவிட சுமார் 6 லட்சம் கோடி அதிகமாகும். இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள், பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் தீவிரமாக பரிசீலிக்கப்படும்.
சுற்றுச்சூழல் பிரச்னை குறித்து இங்கு பேசிய முதல்வர்கள் பலரும் கவலை தெரிவித்தனர். மாநில அரசு அலுவலகங்கள், அரசு இல்லங்கள், தெருவிளக்குகள் என அனைத்திலும் எல்இடி மின் விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் புவி வெப்பமயமாதலை குறைக்க முடியும். 
ஒரே நேரத்தில் தேர்தல்: மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்துத் தரப்பிலும் பரவலாக ஆலோசனை நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் தேர்தல் நடத்துவதற்கான செலவு பெருமளவில் குறையும் என்றார் மோடி.
"புதிய இந்தியா 2022' வளர்ச்சித் திட்டத்துக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன், ஆயுஷ்மான் பாரத், தேசிய சத்துணவு திட்டம், இந்திர தனுஷ் திட்டம் என மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின கொண்டாட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக, நீதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 2015, பிப்ரவரியில் நடைபெற்றது. அப்போது, நீதி ஆயோக் அமைப்பிற்கான வரையறைகள், தேசிய விவகாரங்களில் மத்திய - மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நீதி ஆயோக் அமைப்பு பாலமாக செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதி ஆயோக் அமைப்பின் துணைக் குழுக்களும், செயலாக்கக் குழுக்களும் உருவாக்கப்பட்டன. பின்னர், அதே ஆண்டு ஜூலை 15-இல் நடைபெற்ற நிர்வாகக் குழுவின் 2-ஆவது கூட்டத்தில், துணை மற்றும் செயலாக்கக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற 3-ஆவது கூட்டத்தில், மக்களவை- மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த யோசனையை மோடி முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT