இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்: சட்டப் பேரவை முடக்கம்

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி)- பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, அங்கு புதன்கிழமை ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் சட்டப் பேரவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 
காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுவது, இது நான்காவது முறையாகும்.
ஜம்மு-காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பமாக, ஆளும் பிடிபி கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதையடுத்து, மெஹபூபா முஃப்தி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். செவ்வாய்க்கிழமை இரவு, ஆளுநர் என்.என்.வோரா தனது அறிக்கையை, தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கை, அங்கிருந்து அரசு முறைப் பயணமாக, கிரீஸ், சூரினாம், கியூபா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கை கிடைத்தவுடன், அதைப் படித்துப் பார்த்த ராம்நாத் கோவிந்த், ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் 92-ஆவது பிரிவின்படி, அந்த மாநிலத்தில் உடனடியாக ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தார். இந்தத் தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
இதனிடையே, ஆளுநர் அறிக்கையின் நகல், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் ஆளுநருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வருவதாக, என்.என்.வோரா அறிவித்தார். ஆளுநர் ஆட்சி ரத்து செய்யப்படும் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, மாநிலத்தில் சட்டப் பேரவை முடக்கி வைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, மாநிலத்தில் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து தலைமைச் செயலர் பி.பி.வியாஸுடன் ஆளுநர் என்.என்.வோரா ஆலோசனை நடத்தினர். அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக என்.என்.வோரா கடந்த 2008-ஆம் ஆண்டு பதவியேற்றார். அதிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளில், தற்போது 4-ஆவது முறையாக ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 40 ஆண்டுகளில், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுவது, இது 8-ஆவது முறையாகும்.
மீண்டும் தேர்தல்- ஒமர் அப்துல்லா: இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையைக் கலைத்து விட்டு, மாநிலத்தில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT