ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என இரு விசாரணை அமைப்புகளுமே வழக்குப் பதிவு செய்துள்ளன.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும், அதற்காக ரூ.305 கோடி லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு செப்டம்பரில் முடக்கினர். இருவரிடமும் விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கு, தில்லி சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை ரத்து செய்ய கோரி, அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை; தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் அவருக்கு இடைக்கால நிவாரணத்தை நீதிமன்றம் அளித்தது. ஆனால், அந்த நிபந்தனையை அவர் மீறிவிட்டார். அவரை காவலை எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில், விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் செயல்படுவதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு தில்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் நிதீஷ் ரானா கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் தரப்பு வழக்குரைஞரின் வாதத்துக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றார். அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக துணை நிலை குற்றப்பத்திரிகையை சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதையடுத்து, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்யவதற்கான தடையை நவம்பர் 1-ஆம் தேதிக்கு வரை நீட்டித்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையும் அன்றைய தினமே நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்த முறைகேடு வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், அவர்களை வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுவித்துவிட்டது.