இந்தியா

சபரிமலை: கேரள அரசுக்கு பாஜக 24 மணி நேரம் கெடு

தினமணி

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முயற்சித்து வரும் மாநில அரசின் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேரள அரசுக்கு மாநில பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற 24 மணி நேரம் அரசுக்குக் கெடு விதித்துள்ளது.
 அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி அளித்து கடந்த மாதம் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இந்தத் தீர்ப்பானது பெரிதும் வரவேற்கப்பட்ட போதிலும், பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டங்களும், கண்டனப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
 அரசின் முடிவு: இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தப் போவதாக, மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. பல்வேறு ஹிந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மேலும், பல்வேறு மாநிலங்களிலும், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளிலும் இந்த விவகாரத்துக்காக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
 முக்கியத் திருப்பம்: இதில் முக்கியத் திருப்பமாக, மாநில அரசுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் கடந்த 10-ஆம் தேதி பத்தனம்திட்டா மாவட்டத்தின் பந்தளம் பகுதியிலிருந்து "சபரிமலையைக் காப்போம்' என்ற மாபெரும் பேரணி ஒன்றைத் தொடங்கினர். அப்போது, சபரிமலை விவகாரத்தில் அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், முந்தைய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
 இந்நிலையில், பேரணியின் கடைசி நாளான திங்கள்கிழமை, பெண்கள், குழந்தைகள், ஐயப்ப பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் அப்பேரணியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள், ஐயப்பனின் படத்தை ஏந்தியும், அரசின் முடிவுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியும், ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தவாறும் பேரணியில் பங்கேற்றனர்.
 கோயிலின் மதிப்பைக் கெடுக்க "சதி': கடந்த 6 நாள்களில் 90 கி.மீ. தூரம் நடந்த பேரணியினர், திங்கள்கிழமை திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தை அடைந்தனர். அப்போது, பாஜக பொதுச் செயலாளர் பி.முரளிதர ராவ் பேசியதாவது:
 மாநில அரசு, கோயிலின் நன்மதிப்பைக் கெடுக்க "சதி' செய்து வருகிறது. சபரிமலை கோயிலானது, மாநில பக்தர்கள் மட்டும் வழிபடும் இடம் அல்ல. பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் இங்கு வழிபட்டு வருகின்றனர். அப்படியிருக்கையில், பக்தர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல், மாநில அரசு நடந்து வருகிறது.
 மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 24 மணி நேரம் கெடு: பின்னர், மாநில பாஜக தலைவர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பேசியதாவது:
 மாநில அரசுக்கு எதிரான பாஜகவின் முதல்கட்ட பேரணி மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் மாநில அரசு தகுந்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையேல், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, அங்குள்ள மக்களைத் திரட்டி, மிகப்பெரும் போராட்டம் ஒன்றை பாஜக நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.
 வன்முறையைத் தூண்டி வருகிறது: பாஜகவின் கெடு குறித்து கருத்து தெரிவித்த மாநில தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராமன், "பாஜக கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டிவருகின்றன. அவர்கள் மாநிலத்திலுள்ள பெண்களைத் தவறாக வழிநடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது மாநில அரசின் கடமையாகும். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையைக் கெடுக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல' என்று தெரிவித்தார்.
 சிறப்புக் கூட்டம்: இந்நிலையில், நவம்பரில் தொடங்கி, 3 மாத காலங்கள் நடைபெறவுள்ள மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை சிறப்புக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க சபரிமலை ஐயப்பன் கோயிலின் பங்குதாரர்களான தந்திரிகள் குடும்பம், பந்தளம் குடும்பம், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், தீர்ப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
 மலையாளத்தின் துலாம் மாத 5 நாள்கள் சிறப்புப் பூஜைக்காக புதன்கிழமை சபரிமலை கோயில் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT