இந்தியா

உல்ஃபா தலைவருக்கு அடைக்கலம் தரக் கூடாது: சீனாவிடம் ராஜ்நாத் நேரில் வலியுறுத்தல்

DIN


உல்ஃபா தீவிரவாத அமைப்பின் தலைவரான பரேஷ் பரூவாவுக்கு அடைக்கலம் தரக் கூடாது என்று சீனாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் இந்தியா-சீனா பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உயர்நிலை குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜாவோ கேஜி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த கூட்டத்தின்போது கேஜியிடம், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அளித்துள்ள மனுவுக்கு சீனா ஆதரவு தர வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். மேலும் வடகிழக்கு இந்தியாவில் செயல்படும் முக்கிய தீவிரவாத அமைப்பான உல்ஃபாவின் தலைவர் பரேஷ் பரூவா, சீனாவுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டி, அவருக்கு அந்நாடு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எனவும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
இதுதவிர்த்து, இரு நாடுகளும் பரஸ்பரம் கவலைப்படும் விஷயங்களை பகிர்ந்து கொண்டன; மேலும், அந்த விஷயங்களில் ஒத்துழைப்பு அளிக்கவும் ஒப்புக் கொண்டன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகவும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் மீது இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அஸார் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. எனினும், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, மசூத் அஸார் மீது பாகிஸ்தான் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மனு அளித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலுள்ள பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, தனது வீட்டோ அதிகாரத்தால் இந்தியாவின் முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT