இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 3 காவல் அதிகாரிகள் கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் 2 காவல்துறை அதிகாரிகள் மற்றுமொரு காவலரை பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கடத்திச் சென்று, பின்னர் கொலை செய்தனர். மூவரின் உடல்களும் தோட்டப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தினரால் நடத்தப்படுவதாகக் கூறப்படும் சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில், காவல் துறை அதிகாரிகளின் கொலைக்கு பொறுப்பேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு ஹிஸ்புல் இயக்கத்தினரே காரணம் என பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் சந்தேகிக்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை பணியாளர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தளபதி ரியாஸ் நைகூ, பல்வேறு சமயங்களில் மிரட்டல் விடுத்து வந்தார். குறிப்பாக, சிறப்பு காவல் அதிகாரிகள் (எஸ்பிஓ) பதவி விலக வேண்டும் என்பது அவரது பிரதான நிபந்தனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தலைவர் சையது சலாஹுதீனுடைய இரண்டாவது மகனை, பயங்கரவாத செயல்களுக்காக நிதியுதவி பெற்றதாக குற்றம்சாட்டி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் துறையில் பணியாற்றும் 8 நபர்களுடைய உறவினர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
மீண்டும் கடத்தல்: அந்த சம்பவம் நடந்து, மூன்று வாரங்களே ஆகியுள்ள நிலையில், சோபியான் மாவட்டம், படாகுண்ட் மற்றும் காப்ரான் கிராமங்களில் இருந்து சிறப்பு காவல் அதிகாரிகள் பிர்தோஸ் அஹமது, குல்வந்த் சிங் மற்றும் காவலர் நிசார் அஹமது ஆகியோரை பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கடத்தினர்.
கிராம மக்கள் பயங்கரவாதிகளை சூழ்ந்து கொண்டு, அந்த மூவரையும் விடுவிக்குமாறு கெஞ்சியபோது, பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மூவரையும் அவர்கள் கடத்திச் சென்றனர்.
இதற்கிடையே, பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் அந்த மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தோட்டப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர்.
தலைவர்கள், அதிகாரிகள் கண்டனம்: காவல்துறை அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்திக் கொலை செய்த நிகழ்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி இதுகுறித்து கூறுகையில்,
பயங்கரவாதிகளின் தோட்டாக்களுக்கு காவல்துறை அதிகாரிகள் மூவர் தங்களது உயிரை பலி கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு அனைத்து வகையிலும் நாங்கள் கண்டனங்களையும், அதிர்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமான விஷயம் என்னவெனில், இது உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கான ஆறுதலாக அமைந்துவிடாது. 
மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகள் இப்பிரச்னைக்கு தீர்வாக அமையாது. தற்போது பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே தொலைதூர கனவை எட்டுவதற்கு வழிவகுக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் செயல் கோழைத்தனமானது என்று காஷ்மீர் சரக காவல்துறை தலைவர் ஸ்வயம் பிரகாஷ் பானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் வீரம் செறிந்த நமது சக பணியாளர்கள் மூவரை இழந்துள்ளோம். உயிர்நீத்த மூவருக்கும் நாம் தலைவணங்குகிறோம். கூடிய விரைவில், இதில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்'' என்றார்.

காவல் அதிகாரிகள் 6 பேர் ராஜிநாமா?
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜிநாமா செய்துள்ளனர். கொலை சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில், இர்ஷாத் அஹமது பாபா என்ற காவலர், தனது பணியை ராஜிநாமா செய்வதாகக் கூறி விடியோ பதிவு வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
சிறப்புக் காவல் அதிகாரி தஜ்லா ஹுசைன் லோன், கடந்த 17-ஆம் தேதியே தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், தான் பதவியில் இருப்பதாக யாரும் சந்தேகிக்க வேண்டாம் என விளக்கம் அளிக்கும் வகையில் அவரும் விடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
இதேபோல், மேலும் 4 காவல் அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
அரசு மறுப்பு: இதற்கிடையே காவல்துறை அதிகாரிகள் யாரும் ராஜிநாமா செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜம்மு-காஷ்மீரில் அதிகாரிகள் ராஜிநாமா செய்துள்ளதாகக் கூறப்படுவது பொய் என மாநில காவல்துறை உறுதி செய்துள்ளது. சமூகவிரோத சக்திகளால் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT