இந்தியா

மருத்துவமனையில் சசி தரூருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

தினமணி

துலாபார வேண்டுதலின்போது ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூரை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
 மலையாளப் புத்தாண்டையொட்டி, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அம்மன் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்(63), தனது எடைக்கு சமமாக சர்க்கரை தானம் செய்வதற்காக திங்கள்கிழமை சென்றிருந்தபோது, தராசின் கொக்கி அறுந்து விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் இப்போது திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 இதனிடையே, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சசி தரூருக்கு எதிராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் உள்பட பல தொகுதிகளின் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை இரவு கேரளத்துக்கு சென்றார்.
 இந்நிலையில், காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசி தரூரை செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்.
 இதுதொடர்பாக சசி தரூர் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "கேரளத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வந்திருந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை சந்தித்து நலம் விசாரித்தார். நிற்க நேரமில்லாது அவர் பணியாற்றி வரும் நிலையில், எனக்காக நேரம் ஒதுக்கியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அரசியலில், கொள்கை வேறுபாடுள்ள அரசியல் கட்சி தலைவர்களிடையே இத்தகைய நாகரிகத்தை காண்பது அரிது. அவரது செயல் அனைவருக்கும் உதாரணமாக இருக்கட்டும்' என்று தெரிவித்துள்ளார்.
 சசி தரூருக்கு எதிராக போட்டியிடும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சி. திவாகரனும், மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT