இந்தியா

சுஷ்மா மறைவு: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி

DIN

பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சேவாக், கம்பீர், சானியா உள்ளிட்ட விளையாட்டுப் பிரபலங்கள் அஞ்சலி செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என சேவாக் பதிவிட்டுள்ளார். சுஷ்மா மறைந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என முகமது கைஃப் மற்றும் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்தனர்.

மூத்த அரசியல் தலைவரும், பாஜக தூண்களில் ஒருவருமான சுஷ்மா மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவராலும் நேசிக்கப்பட்ட மிகப்பெரிய தலைவர். அதனால் அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கௌதம் கம்பீர் பதிவிட்டுள்ளார்.

சுஷ்மா மறைவு தனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார். 

மக்களுக்கான தலைவர், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தக்கூடியவர், நேர்மையானவர், சிறந்த தலைவர், இவை அனைத்துக்கும் கூட மேலானவர். சுஷ்மாவின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு மன வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பதிவிட்டார்.

பெண் குழந்தைகள் முக்கியத்துவத்தின் தூதராக சுஷ்மா அவர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பும், பெருமையும் கிடைத்தது. இதனால் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். இதை எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்று டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மாலிக் குறிப்பிட்டார்.

50 ஆண்டுகால பொது வாழ்க்கை. அர்ப்பணிப்பு, அன்பு ஆகியவற்றின் மூலம் எண்ணற்ற மனங்களை சொந்தமாக்கியவர். சிறந்த வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றியதற்காக என்றும் நினைவுகூரத்தக்கவர். சுஷ்மா இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் தெரிவித்தார்.

நான் மிகவும் மதித்த, நேசித்த எனக்கு மிகவும் பிடித்தமான அரசியல் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் மறைந்துவிட்டார். அவருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT