இந்தியா

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: கமல்நாத் மருமகனை ஆக.20 வரை கைது செய்ய இடைக்காலத் தடை

DIN


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்குடன் தொடர்புடைய நிதி மோசடி வழக்கில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் புரியை கைது செய்வதற்கு, வரும் 20-ஆம் தேதி வரை தடை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரதுல் புரி தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துவிட்டதை அடுத்து, ரதுல் புரி தரப்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.  அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கெளர், வரும் 20-ஆம் தேதி வரை ரதுல் புரியைக் கைது செய்ய தடை விதித்ததுடன், அடுத்த விசாரணையை அன்றை தேதிக்கு ஒத்திவைத்தார். 
எனினும், ரதுல் புரியை அழைத்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். 
ரதுல் புரியின் மேல்முறையீட்டு மனுவுக்கு அமலாக்கத் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு எதிராக பிணையில் வெளிவர இயலாத கைது ஆணை கடந்த 9-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அவர் தப்பி வருவதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் வாதாடப்பட்டது. 
முன்னதாக, இந்த நிதி மோசடி வழக்கின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ளும் வகையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ரதுல் புரிக்கு இருக்கும் தொடர்பு எத்தகையது என்பதை துல்லியமாகத் தெரிவிக்கும் வகையில் அந்த அறிக்கை இருக்க வேண்டும் என்று கூறியது. 
இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடியில் சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த பலருக்கு கோடிக்கணக்கான ரூபாயை அந்த நிறுவனம் லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 
இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் கிறிஸ்டியன் மிஷெல், ரதுல் புரி மூலமாக லஞ்சப் பணத்தை பகிர்ந்தளித்ததாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக, ரதுல் புரியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT