இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு

DIN


முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஆறாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
 86 வயதாகும் மன்மோகன் சிங்கிற்கு மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தனது அலுவலக அறையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்வில் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவர் தாவர் சந்த் கெலாட், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, அகமது பட்டேல், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் சில பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 இந்நிகழ்ச்சிக்குப் பிறகு எம். வெங்கய்ய நாயுடு தனது சுட்டுரைப் பக்கத்தில், மன்மோகன் சிங் பதவியேற்பு நிகழ்வு தொடர்புடைய புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்த பதிவில், எனது அறையில் மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதவியேற்பின் போது மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கௌரும் உடனிருந்தார். 
மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக வேட்பாளரை பாஜக நிறுத்தாததால், அவர் போட்டியிட்டின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பாஜக எம்பி மதன் லால் ஷைனி மறைவைத் தொடர்ந்து, அந்த இடம் காலியானது. அந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்துள்ள காங்கிரஸுக்கு அந்த இடம் சென்றது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18-ஆம் அந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் ஜூன் 14-ஆம் தேதி முடிவடைந்தது. அவர் முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்வாகியிருந்தார். கடந்த 28 ஆண்டுகளாக அவர் எம்பியாக இருந்து வருகிறார். 
இந்நிலையில், தற்போது ராஜஸ்தானில் இருந்து எம்பியாக பதவியேற்றுள்ளார். மாநிலங்களவைக்கு 1991, 1995, 2001, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1998-2004-இன் போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்தார்.
மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் ராம்ஜேத்மலானி (96), மோதிலால் வோரா (91), சி.பி. தாக்குர் (88) ஆகியோருக்குப் பிறகு நான்காவது மூத்த உறுப்பினராக மன்மோகன் சிங் உள்ளார். 79 வயதாகும் மகேந்திர பிரசாத் மாநிலங்களவையில் ஏழாவது முறையாகவும், ராம் ஜேத்மலானி ஆறாவது முறையாகவும், மோதிலால் வோரா நான்காவது முறையாகவும் உறுப்பினராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT