பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் போராட எதிர்க்கட்சிகள் உறுதி
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் போராட எதிர்க்கட்சிகள் உறுதியேற்றுள்ளன.ஆம் ஆத்மி கட்சி சார்பில், சர்வதிகாரத்தை வீழ்த்துவோம்
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் போராட எதிர்க்கட்சிகள் உறுதியேற்றுள்ளன.ஆம் ஆத்மி கட்சி சார்பில், சர்வதிகாரத்தை வீழ்த்துவோம், ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தில்லி முதல்வர் கேஜரிவால் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலர் பங்கேற்றுப் பேசினர். அதன் விவரம்:
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்:ரஃபேல் விவகாரம் தொடர்பாகஇந்தியா-பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தத்தின்உண்மையை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். பிரதமராக உள்ள நரேந்திர மோடி நாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார். மேலும், அவர் அரசியலமைப்பைச்சிதைத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க அரசுக்கு எதிராக தில்லியிலிருந்து 40 சிபிஐ அதிகாரிகளை அனுப்பி வைத்தவர் அவர். தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஊழல் தடுப்புப் பிரிவை மத்திய அரசு நான்கு ஆண்டுகளாக கைப்பற்றி வைத்திருக்கிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி:ஜனநாயகம் தற்போது நமோநாயகமாக மாறிவிட்டது. தற்போது நாட்டில் நிலவும் சூழல் அவசரக்காலத்தை விட மோசமாக உள்ளது. கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை அவரது வீட்டிலேயே விசாரணை நடத்த முயலும் அளவுக்கு சிபிஐயின் நடவடிக்கை கீழ்த்தரமாக இருந்தது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராடும்.
டி. ராஜா எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட்,தேசியச் செயலர்): பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டமும், நாடாளுமன்றமும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைப்பற்றியது போன்ற சூழலை அனுமதிக்க முடியுமா? பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அரசியலமைப்புக்கு அபாயமானதாகும். எனவே, பாஜகவை தோற்கடிக்க வேண்டும்.
சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்):சகோதாரர்களுக்குள்ளே சண்டையிடும் துச்சாதனன் போன்ற அரசியலை மோடி முன்வைத்து வருகிறார். சிறந்த இந்தியாவை உருவாக்க தற்போதுள்ள அரசை மாற்ற வேண்டும்.
நாட்டைக் காப்பாற்ற, தற்போதுள்ள காவலரை மாற்றியாக வேண்டும். கெளரவ சேனாவைப் போல பாஜகவைப்பாண்டவர்களாக உள்ள எதிர்க்கட்சிகள் வீழ்த்தி நாட்டை காப்பாற்றுவோம்.
கனிமொழி (திமுக மாநிலங்களவை உறுப்பினர்): ஒடுக்கப்பட்ட மக்கள், கருத்துச் சுதந்திரம், விவசாயிகள், பொருளாதாரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பாஜக அரசு வீழ்த்தப்படத்தான் வேண்டும்.
அருணாசல பிரதேச முதல்வர் ஜெக்காங் அபங்:நமது வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, ஒற்றைக் கலாசாரம் முன்வைக்கப்படுகிறது. குடியரசு ஆட்சியை மீட்க அராஜக ஆட்சியை வீழ்த்த வேண்டிய தேவை உள்ளது. மோடி ஆட்சியைக் கண்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியா ஒன்றுபட்ட நாடு. வட கிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் எந்தவொரு அரசும் தேர்தலில் வீழ்த்தப்படும்.
இந்தப் பொதுக்கூட்டத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபாரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.